16 வயதுச் சிறுவன் செலுத்திய வாகனம் பல வாகனங்களுடன் மோதி விபத்து

16 வயதுச் சிறுவன் செலுத்திய வாகனம் பல வாகனங்களுடன் மோதி விபத்து-Welisara Accident-16 Year Old-Father Arrested

- மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்தில் பலி
- வாகன உரிமையாளரான தந்தை கைது

இன்று (04) காலை வெலிசறை பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய வாகனமொன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (04) காலை 9.00 மணியளவில் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசறை பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட பல வாகனங்களுடன் குறித்த வாகனம் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு திசையில் பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த மோட்டர் வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் நகைக்கடையொன்றை நடாத்தி வரும் வர்த்தகர் ஒருவரின் 16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு தனது தந்தையின் சொகுசு வாகனத்தை (Mitsubishi Montero Sport) செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியின் நடுவிலுள்ள தடுப்பை மீறி எதிர்த் திசையில் பயணித்த வாகனங்களுடனேயே இவ்வாறு மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் வீதியின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரைக் கடந்து மறுபுறம் திரும்பி மற்றொரு கார் மீது ஏறியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து, சட்ட வரையறையை மீறி குறைந்த வயது நபர் வாகனம் செலுத்தியமை விபத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக குறித்த வாகனத்தின் உரிமையாளர் எனும் வகையில் வாகனத்தை செலுத்தியவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தை எதற்காக எடுத்து வந்தார் உள்ளிட்ட விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.