தரம் 5 புலமைப் பரிசில்: ஜனவரி 22; A/L: பெப். 07 - மார்ச் 05; O/L: மே 23 - ஜூன் 02

தரம் 5 புலமைப் பரிசில்: ஜனவரி 22; A/L: பெப். 07 - மார்ச் 05; O/L: மே 23 - ஜூன் 02-Grade 5 Scholarship-GCE AL-GCE OL Exam Date Announced

- இவ்வார அமைச்சரவையில் 09 தீர்மானங்கள்

கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

  • 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: 2022 ஜனவரி 22, சனிக்கிழமை
  • க.பொ.த. உயர் தர பரீட்சை: 2022 பெப்ரவரி 07, திங்கட்கிழமை - 2022 மார்ச் 05 சனிக்கிழமை
  • க.பொ.த. சாதாரண தர பரீட்சை: 2022 மே 23, திங்கட்கிழமை - 2022 யூன் 01, புதன்கிழமை

2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர் தர மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முடிவுகள்

2. ஜெனரல்   ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்
பக்றீரியாவால் பரவும் மெலியோயிடோசிஸ் எனும் நோய் உலகில் அதிகமான வெப்பமண்டல நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.

எமது நாட்டில் குறித்த நோயை முற்கூட்டியே அடையாளங் காண்பதற்கும், அது தொடர்பாக அறிந்து கொள்வதற்கும் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட ஆராய்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினருக்கும் இடையில் உபவழங்கல் ஒப்பந்தம் மற்றும் பொருட்கள் பரிமாற்ற ஒப்பந்தமொன்றையும் மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான கடன் சலுகை முறையொன்றை நடைமுறைப்படுத்தல்
2020 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக்தொன் அளவிலான எமது நாட்டு இறால் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெட்ரிக்தொன்களாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இறால் வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இறால் அதிக வளர்ச்சி வேகத்துடன் கூடிய, நோயால் பீடிக்கப்படும் தன்மை குறைவான, சிறிய தடாகங்களில் வளர்க்கும் போது அதிக அடர்த்தியாக விடக்கூடியதாக இருப்பதால் அதிகளவிலான அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. குறித்த இறால் வகை ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் வளர்ப்பை மேற்கொள்வதற்கு இயலும்.

ஆனாலும் அடர்த்தியுடன் வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும், ஆகவே அதிகளவில் தடாகத்தில் சேர்கின்ற கனிமக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான சேற்றுத் தடாகம் அதிக அடர்த்தியுடன் கூடிய பொலிஎத்தலீன் பயன்படுத்தப்படும் நவீனப்படுத்தல் அவசியமாகும். மேலும், அதற்குச் சமாந்தரமாக, அதிகரிக்கும் இறால் அறுவடைகளை ஏற்றுமதிக்கான களஞ்சியப்படுத்தல் வசதிகள், அதன் மூலம் பெறுமதிசேர் உற்பத்திகளை பதனிடுவதற்காக இறால் பதினிடல் நிலையத்தின் இயலளவை அதிகரிப்பதற்கும், அவற்றை புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

அதற்கமைய, வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர்
சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. மின்னுற்பத்தி தொழிற்துறை பற்றிய பொதுவான கொள்கை வழிகாட்டி 
2030 ஆம் ஆண்டாகும் போது மின்னுற்பத்தியின் 70மூ வீதமானவை மீள்பிறப்பாக்க வளங்களிலிருந்து பெற்றுக்கொள்வதும், எதிர்காலத்தில் புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவாமல் இருப்பதற்கும், 2050 ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்தியில் ஏற்படும் தூயகாபன் வெளியேற்றத்தை இல்லாது செய்தல் போன்ற பிரதான கொள்கை இலக்குகளுக்காக 2021 செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறித்த அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மின்னுற்பத்தி தொழிற்துறைக்காக 'பொதுவான கொள்கை வழிகாட்டி' ஒன்றை வெளியிடுவதற்கும், குறித்த வழிகாட்டிக்கமைய 2022-2041 காலப்பகுதியில் குறைந்த செலவில் நீண்டகால உற்பத்தி திட்டம் இலங்கை மின்சார சபையால் தயாரிக்கப்பட வேண்டுமெனவும், குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கமைய 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள 'மின்னுற்பத்தி தொழிற்துறைக்கான பொதுவான கொள்கை வழிகாட்டி' இற்காகவும், குறித்த வழிகாட்டியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான தலபத்பிட்டியில் அமைந்துள்ள காணியொன்றை அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் வழங்கல்
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் 6.32 பேர்ச்சர்ஸ் காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக 2020 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணிப்புக்கள், கட்டுமானங்கள், நிதியிடல், தொழிற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையின் கீழ் முதலீட்டாளர்களுக்கு போட்டித்தன்மையின் அடிப்படையிலான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக, மூன்று முதலீட்டாளர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு 'இன்டநெஷனல் கன்ஸ்ரக்சன் கொன்சோட்டியம் (தனியார்) கம்பனி' சமர்ப்பித்த முன்மொழிவைப் பரிந்துரை செய்துள்ளது. குறித்த பரிந்துரைக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த காணித்துண்டை 'இன்டநெஷனல் கன்ஸ்ரக்சன் கொன்சோட்டியம் (தனியார்) கம்பனி' இற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்கள் /கட்டிடங்களை பயனுள்ள விடயங்களுக்குப் பயன்படுத்துதல்
கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்கள் /கட்டிடங்கள் வளாகங்களை அரச நிறுவனங்களுக்கும் தனியார் துறையினருக்கும் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இன்னும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாமல் காணப்படும் கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களஞ்சியம் /கட்டிட வளாகங்களை அரச பெறுகைக் கோரல் செயன்முறையைப் பின்பற்றி, வாடகை அடிப்படையில் குறுகிய காலங்களுக்கு தனியார் துறையினருக்கு வழங்குவதற்கு சதொச பணிப்பாளர் சபையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த களஞ்சியம்ஃகட்டிட வளாகங்களை, அரச பிரதான மதிப்பீட்டாளர்களின் மதிபீட்டை அடிப்படையாகக் கொண்டு வாடகை அடிப்படையில் தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அரச - தனியார் பங்குடமை முதலீட்டுக் கருத்திட்டங்களுக்காக பொருத்தமான களஞ்சியங்கள்ஃகட்டிடங்கள் வளாகங்களை விருப்புத் தெரிவிப்புக்களைக் கோருவதன் மூலம் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கும் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 'நீர்ப்பாசன செழுமை' வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை அரச நிறுவனங்களின் நேரடி சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை மேலும் நிலைபேறாக்கலும், அதன்மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்துவதற்காகவும் 'நீர்ப்பாசன செழுமை' வேலைத்திட்டத்தின் கீழ் 5,000 கிராமிய குளங்கள்ஃஅணைக்கட்டுக்களைப் புனரமைத்தல் இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் 1,000 கிராமிய குளங்கள்ஃஅணைக்கட்டுக்களை புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, மகாவலி ஆலோசனை சேவைப் பணியகம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

'நீர்ப்பாசன செழுமை' வேலைத்திட்டத்தை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன், அதற்காக அரச நிறுவனங்கள் மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய 'நீர்ப்பாசன செழுமை' வேலைத்திட்டத்தின் கீழ் கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது 50 மில்லியன் ரூபாய்கள் வரையான ஒப்பந்தங்களை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், அரச அபிவிருத்திகள் மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திர உபகரணங்கள் நிறுவனம், மத்திய பொறியியலாளர் சேவைகள் கம்பனி, மகாவலி ஆலோசனை சேவைப் பணியகம் மற்றும் மகநெகும போன்ற பகுதியளவு அரச நிறுவனங்களுக்கு நேரடி ஒப்பந்தங்களை ஒப்படைக்கும் பொறிமுறைகளைப் பின்பற்றி ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. எப்பாவெல, கிரிபாவ நீர்வழங்கல் கருத்திட்டம்
எப்பாவெல, இராங்கனை, நொச்சியாகம மற்றும் கிரிபாவ ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கீழ் இராஜாங்கனை – நொச்சியாகம கருத்திட்டக்கூறு உள்ளூர் நிதியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும், எப்பாவெல மற்றும் கிரிபாவ கருத்திட்டப்பகுதி, M/s LR Group of Israel மற்றும் SBI International Holding AG of Switzerland – JV இனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கும் 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறு, எப்பாவெல கிரிபாவ நீர்வழங்கல் முன்மொழிவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 162.66 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தத்தை M/s LR Group of Israel மற்றும் SBI International Holding AG of Switzerland – JV இற்கு வழங்குவதற்காக நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல்
படகு மற்றும் கடற்கலன்களை இறக்குமதி செய்வதற்கான முறைமைப்படுத்தலை மேற்கொள்ளும் நோக்கில் அவற்றை இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திர முறை மூலமும் அனுமதிப்பத்திரக் கட்டண அடிப்படையிலும் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2021 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.