பல்சமய பங்கேற்புடன் காத்தான்குடியில் மீலாத் விழா

பல்சமய பங்கேற்புடன் காத்தான்குடியில் மீலாத் விழா

நாட்டில் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்காக பல்வேறு தரப்பினரும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ‘காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பு’ சகவாழ்வு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வமத ஒன்றியத்துடன் இணைந்து சகவாழ்வு வேலைத் திட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. காத்தான்குடியில் பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்ட இனஐக்கியத்தை வலுவூட்டும் மீலாத் விழா அண்மையில் நடைபெற்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மீலாத் தினத்தையொட்டி இந்த இன ஐக்கிய மீலாத் விழா நடைபெற்றது. காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி றோயல் பலஸ் மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம்.சாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த மீலாத் விழாவில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் சிவசிறீ சிவபாலன் குருக்கள், எஹெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் அருட்தந்தை இயேசுதாசன், அருட்தந்தை ஜோசப் மேரி மற்றும் இணைப்பாளர் கிறிஸ்டி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை மற்றும் உலமாக்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினால் மீலாத் தினத்தையொட்டி நடத்தப்பட்ட மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டி மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சிறப்புகள், அவர்களின் மனித நேயப்பணி, சகவாழ்வுக்கும் இன ஐக்கியத்துக்கும் அவர் காட்டிய முன்மாதிரிகள் பற்றி சமயத் தலைவர்களினால் இங்கு உரைகள் ஆற்றப்பட்டன.

இதே போன்று காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பு கடந்த இஸ்லாமிய புதுவருட விழாவினையும் சகவாழ்வு விழாவாக பல்சமயத் தலைவர்களின் பங்குபற்றலுடன் நடத்தியது.

இவ்வாறான இனஐக்கிய சகவாழ்வு வேலைத் திட்டங்கள், சகவாழ்வு விழாக்கள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் இன நல்லுறவையும் வளர்ப்பதுடன் சந்தேகங்களையும் களைந்து சமூக ஒற்றுமையை ஏற்படச் செய்யுமென்று விழாவில் பங்கேற்ற பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

எம்.எஸ். நூர்தீன்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)