பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே வெளியிடப்பட்ட, 'குறிப்பிட்ட பொருட்கள்/ நியமப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான பொருட்களின் பட்டியல் அடங்கிய வர்த்தமானியிலிலிருந்து குறித்த பொருட்கள் நீக்கப்படுவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கான பால் மா, முழு ஆடைப் பால் மா, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மா ஆகிய அனைத்து வகை பால் மாக்களும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரால் இரு வெவ்வேறு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (08) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டதாக, அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்திருந்தார்.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்ட போதிலும் நியாயமற்ற வகையில் அவற்றின் விலையை அதிகரிக்க இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதி தெரிவித்திருந்தாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.