இரசாயனவியலுக்கான நோபல் இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்டோக்ஹோமிலுள்ள நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

இரசாயனவியலில் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டபிள்யூ.சி. மெக்மில்லன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு  ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த ஒக்டோபர் 5, திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விருதை வென்றிருக்கும் இரு விஞ்ஞானிகளும் இரசாயன மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

இரசாயனவியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நினைத்துவந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.