மைத்துனரின் தாக்குதலுக்குள்ளான நபர் 7 நாட்களின் பின் மரணம்

கணவன் - மனைவி தகராறு; மைத்துனரின் தாக்குதலுக்குள்ளான நபர் 7 நாட்களின் பின் மரணம்-Husband-Wife Clash-Brother-in-Law Beaten-Husband Dead

- 29 வயது நபர் பலி; 25 வயது நபருக்கு விளக்கமறியல்

மனைவியுடனான தகராறில் மைத்துனரினால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்த முகம்மது முஸ்பீர் (29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, கப்பல் ஆலிம் வீதியில் வசித்து வந்து கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதில், மனைவியின் தந்தையினால் கிரிக்கெட் மட்டையினால் தாக்கியதில் காயமடைந்த குறித்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (02) மாலை மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவரது சடலம், வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய, காத்தான்குடி 03ஐச் சேர்ந்த 25 வயது நபர், சம்பவம் இடம்பெற்று அடுத்தநாள் (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த குறித்த நபர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் இதனாலேயே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.