ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்ட தொடரில் ஜனாதிபதி இன்று உரை

அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் தொடர் நேற்று ஆரம்பம்   

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட விவாதம் நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இம்முறை ஆரம்பமாகிய கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த 18 ஆம் திகதி அதிகாலை புறப்பட்டு, நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரச தலைவராக உரையாற்றவுள்ள முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். அதன்படி ஜனாதிபதி இன்று 22 ஆம் திகதி உரையாற்றுகிறார். இதேவ‍ேளை 100 க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளும் நேரில் தங்கள் உரைகளை ஆற்றவுள்ளனர்.