நடுநிலை வெளிநாட்டுக்கொள்கையை பின்பற்றி இலங்கைக்கு அனைத்து நலன்களையும் பெறுவதே ஜனாதிபதியின் நிலைப்பாடு

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

சகல சர்வதேச நாடுகளுடனும் சமமான நிபந்தனைகளுடன் நட்புறவுடன் செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்ச அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் நாட்டில் நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் அது வாய்ப்பாக அமையும் என்பதே ஜனாதிபதியின் நம்பிக்கை எனவும் தெரிவித்த அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதேபோன்று பிராந்திய மற்றும் சமுத்திர பிரதேசங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படும். அந்த நடவடிக்கைகளில் இந்தியா போன்ற பிராந்திய நாடுகளுடன் இலங்கை மிக நெருக்கமாக செயற்படும்.

பொருளாதார, இராஜதந்திர நடவடிக்கைகளின்போது பொருளாதார இலக்குகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

நாட்டுக்கு கிடைக்கும் முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எந்த வகையிலும் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படப் போவதில்லை என்பது தொடர்பிலும் ஜனாதிபதி அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.

2015 மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்தது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்படி யோசனை நிறைவேற்றப்பட்டு நாட்டுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்துக் கொள்வது,விசேட சட்டங்களை இயற்றுவது மற்றும் விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலும் நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையிலான விடயங்கள் அந்த யோசனையில் உள்ளக்கப்பட்டிருந்தன. அதற்கு அப்போதைய அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

பொறுப்புக்கூறல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சிரேஷ்ட நீதிபதிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்