சேதனப் பசளைப் பயன்பாடு குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை

சேதனப் பசளைப் பயன்பாடு குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை-No Changes in Fertilizer Policies

- அரசாங்கம் அறிவிப்பு

உள்நாட்டு விவசாயத்துக்காக, இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதுடன், சுதேச விவசாயத்துக்கு சேதன உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், எதிர்காலத்திலும் அத்தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும், அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சரினால் 2021ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட, இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண்தாவர ஊட்டக் கூறுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தாவர ஊட்டக் கூறுகளை இறக்குமதி செய்வதற்கான, முன்மொழிவுக்கே, அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

மேற்கூறப்பட்ட இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண்தாவர ஊட்டக் கூறுகளை, தற்போது 2226/48ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த (HS Code) குறியீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதால், விவசாயத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை அங்கீகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, 2226/48ஆம் இலக்க வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிதி அமைச்சரினால் ஜூலை மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட, 2021, 11ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) விதிகளுக்கேற்ப, பின்வரும் வகைகளிலான விசேட உர இறக்குமதிக்கு மட்டும் விவசாயத் திணைக்களம், சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் ஊடாக, விசேட அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் அனுமதியளித்துள்ளது. விவசாயத்துக்காக பயன்படுத்தப்படக்கூடிய உரமானது, சர்வதேச சேதன உர நியமங்களுக்கு ஏற்ப, அனுமதியளிக்கப்பட்டுள்ள சேதன உரங்கள் மட்டுமேயாகும்.

விவசாயத் திணைக்களம், தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் பிரகாரம், அந்நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஆறு மாத காலப் பகுதிக்காக வழங்கும் அனுமதிப் பத்திரங்களின் ஊடாக, பச்சை வீட்டு முறைமையினுள் பாதுகாப்பான விவசாய நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் மற்றும் நீர்த்தாவர வளர்ப்பு, காற்றில் வளரும் தாவரம் மற்றும் மலர் வளர்ப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் நைட்ரஜன் கனிமங்கள் அல்லது இரசாயன உரம் மற்றும் கிலேடட் செய்யப்பட்ட கனிமங்கள் மற்றும் நுண்தாவர ஊட்டக் கூறுகளை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் ஊடாக, கனிமங்கள் அல்லது இரசாயன நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய தாவர ஊட்டக் கூறுகள் மூன்றும் அடங்கிய கலப்பு உரத்தை, அவற்றில் இரண்டைக் கொண்டுள்ள கலவையின் மூலம் தயாரிக்கப்பட்ட உர மாத்திரைகள் (capsule) அல்லது அது போன்ற உற்பத்திகள், 10 கிலோகிராம் கொள்ளளவை அல்லது அதனைப் பார்க்கிலும் குறைவாக தயாரிக்கப்பட்ட பக்கற்றுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து உரங்களினதும் இறக்குமதி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக, தேவைக்கு ஏற்ப அல்லது குறித்த தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மட்டும் வழங்கப்படும் விசேட அனுமதிப் பத்திரத்தின் கீழ் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி உள்ளது.

இதற்கு மேலதிகமாக, நைட்ரஜன் சேதன, கனிம வகை பொட்டாசியத்தை இறக்குமதி செய்ய முடியுமென்பதுடன், அவை இரசாயன உரமாக வகைப்படுத்தப்பட மாட்டாது.

“ஆரோக்கியமான மற்றும் வினைத்திறனான பிரஜைகளை உருவாக்குவதற்கு, அரசாங்கத்தினால் நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், இலங்கையில் விவசாயத்துறைக்கு முழுமையாக சேதன உரத்தைப் பயன்படுத்துவதற்கு, அதன் உற்பத்தியை விரைவுபடுத்த வேண்டும்” என்பதே, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் உறுதிமொழியாகும்.

PDF File: 

Add new comment

Or log in with...