எரிபொருள் விலை: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் முடிவு

எரிபொருள் விலை: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் முடிவு-Fuel Price Increase-Udaya Gammanpila Replied

- சாகர காரியவசமின் அறிவிப்புக்கு கம்மன்பில பதில்

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையினால் கூட்டாக எடுக்கப்பட்ட தீர்மானமே தவிர, தனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல என, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில், அதற்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டுமென, பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி, சாகர காரியவசம் விடுத்த அறிக்கை தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜூன் 09ஆம் திகதி வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழு கூடி எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அவ்வாறு எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவையெ தான் அறிவித்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறித்த கூட்டத்தில், வர்த்தக அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, அஜித் நிவார்ட் கப்ரால், லசந்த அளகியவன்ன, டலஸ் அளகப்பெரும, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த உத்தரவில் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் கையொப்பமிட்டுள்ளதாக, அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...