கல்முனையில் கொரோனா தொற்று 537 ஆக உயர்வு

- அக்கரைப்பற்று: 300, கல்முனை: 69, அட்டாளைச்சேனை: 59
கல்முனை ஹோட்டல்களை இரவு 8 மணியுடன் பூட்ட முடிவு

கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு சுகாதார பிராந்தியங்களுள், கல்முனைப் பிராந்தியத்தில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. 13 சுகாதாரப் பிரிவுகளைக் கொண்ட கல்முனைப் பிராந்தியத்தின் தொற்றுக்களின் எண்ணிக்கை 537ஆக எகிறியுள்ளது.

கல்முனைப் பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 493 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனை நேற்று(17) காலை 10 மணி வரையான தரவுகளை வெளியிட்டுள்ளது.

பிரதேசங்களின் நிலைமை

பிராந்தியத்தில் தனியொரு பிரிவு அதிகூடிய தொற்றுக்களைக் கொண்டது என்றால் அது 300 தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.

இரண்டாவதாக அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 59 தொற்றுக்கள்.

அடுத்ததாக கல்முனை மாநகர எல்லைக்குள் 69 தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 42 பேரும், சாய்ந்தமருதில் 18 பேரும், கல்முனை வடக்கில் 9 பேரும், தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் நேற்றுக் காலை முதல் கல்முனையின் சிலபகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

கல்முனை பிரதான சந்தையும் மூடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள உணவகங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொத்துவிலிலிலும் திடீர் அதிகரிப்பு காட்டியுள்ளது. அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பில் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இறக்காமத்தில் 17 பேரும், திருக்கோவிலில் 13 பேரும், சம்மாந்துறையில் 13 பேரும், காரைதீவில் 8 பேரும், நிந்தவூரில் 5 பேரும், நாவிதன்வெளியில் 3பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஷ்ரப் ஆதார வைத்தியசாலையிலிருந்து இதுவரை வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேருக்கும்,நோயாளிகள் 4பேருக்குமாக மொத்தம் 11பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 85 பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 98பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 28 பேரும், அட்டாளைச்சேனையில் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகி வருகிறது.

இதுவரை கல்முனைப் பிராந்தியத்தில் ஒரேயொரு கொரோனா இறப்பு சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை இப்பிராந்தியத்தில் 12,951பேருக்கு கொரோனாவுக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பி.சி.ஆர் சோதனை 7652பேருக்கும், அன்ரிஜன் சோதனை 5299 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை ஹோட்டல்களை இரவு 8 மணியுடன் பூட்ட முடிவு

கல்முனை பிரதேச ஹோட்டல்கள் அனைத்தும் இரவு எட்டு மணி முதல் பூட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீவிரமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாகவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் ஏ.எம்.றகீபுக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனுக்கும் இடையே மாநகர கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தற்போது கொரோனா தொற்றாளர் அதிகரித்து வருகின்றனர். தனிமைப்படுத்தலும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படுவோர் தொகையும் அதிகரித்து வருகிறது.

தொற்றுப் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கு முகமாக கல்முனை பிரதேசத்தில் கண்டிப்பான சுகாதார நடைமுறைகள் குறித்த திடீர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காரைதீவு குறூப் நிருபர், நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...