மத்துகமை பிரதேச செயலகத்தின் 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

மத்துகமை பிரதேச செயலகத்தின் 3 பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்-Ovitigala-Badugama in Mathugama DS Division Isolated

களுத்துறை மாவட்டத்தின், மத்துகமை பிரதேச செயலக பிரிவிலுள்ள ஓவிட்டிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய (புதிய குடியிருப்பு‌) ஆகிய கிராமங்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மையம்‌ இதனை அறிவித்துள்ளது.

அண்மையில், மத்துகமை - கொழும்பு அதிவேக வீதியில் பயணித்த பஸ் ஒன்றின் நடத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பஸ்ஸில் அநுராதபுரம் பெளத்த யாத்திரை சென்ற 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மத்துகமை பிரதேசத்தில் மாத்திரம் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பஸ்ஸில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களாக, கொழும்பு கப்பல்துறை (Colombo dockyard) ஊழியர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையம் இல்லை என, இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை, குளியாபிட்டி பிரதேசத்தில் கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குளியாப்பிட்டியிலுள்ள கய்யால, ஊறுபிட்டிய ஆகிய கிராமங்களுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருமண நிகழ்வில் 400 பேர் கலந்து கொண்டதாக, சுகாதாரப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.


Add new comment

Or log in with...