முதன்மை விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
கொழும்பு இந்துக் கல்லூரியின் (பம்பலப்பிட்டி) வருடாந்த பரிசளிப்பு விழா – 2019 இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறுகின்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்கின்றார்.
கௌரவ விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்ந டி சில்வா ஆகியோரும், சிறப்பு விருந்தினராக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே. பெரேராவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து சாதனைத் தலைவர்களுக்கு மகுடம் சூட்டும் இந்நிகழ்வு கல்லூரியின் அதிபர் த.ப.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
தலைநகரில், தமிழர் தம் பாரம்பரியங்களையும் இந்து சமய விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற தேசிய பாடசாலைகளில் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு சிறப்பிடமுண்டு. 'பிள்ளையார் பாடசாலை' என்ற பெயரில் 1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு இன்றைய தொழினுட்ப யுகத்திற்கு ஈடுகொடுக்கும் முகமாக பல்வேறு மாற்றங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.
'எழுத்தறிவித்தல்' என்பது தருமங்களுக்குள் சிறந்தது என்று முழங்கினான் மதுரக்கவி பாரதி. அவ்வகையில் உன்னத கல்வியறிவை வாரி வழங்கும் கல்விக் கூடங்களுள் இந்துக் கல்லூரிக்கும் பெரும் பேறு இருக்கின்றது. இத்தகு செயற்பாடுகளுக்கு கல்லூரியின் பயணப்பாதையில் பயணித்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் போற்றுதற்குரியவர்கள். நவீன உத்திகளை உள்வாங்கி பாடசாலையின் வளர்ச்சிக்கு கல்லூரியின் தற்போதைய அதிபர் த.ப.பரமேஸ்வரன் பணியாற்றி வருகின்றார்.
மாணவர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் தேடியறிந்து அவற்றுக்கெல்லாம் ஊக்கமளித்து அவர்களின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டும் இந்நிகழ்வு சிறப்புற நடந்தேற வாழ்த்துகளை கூறி நிற்போம்.
There is 1 Comment
08
Add new comment