பாராளுமன்றம் ஒத்திவைப்பு; ஜனவரி 03 இல் மீண்டும் கூடும்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு; ஜனவரி 03 இல் மீண்டும் கூடும்-Parliament Prorogued-From Midnight Today-Will be Commence on Jan 03rd, 2020-Extraordinary Gazette Issued

ஜனாதிபதியின் பிரகடனம், அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியீடு

இலங்கை பாராளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி (2152/ 7), ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை பாராளுமன்றம், எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி, முற்பகல் 10.00 மணிக்கு மீண்டும் கூடும் என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரைக்கு அமைய விடுக்கப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல் வருமாறு,

அதி விசேஷமானது

2152/ 7 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 02 ஆந் திகதி திங்கட்கிழமை

அதியுத்தமராம் சனாதிபதி அவர்களினால் செய்யப்படும் பிரகடனம்

கோட்டாபய ராஜக்‌ஷ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையினால் எனக்குரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, சனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான், இப்பிரகடனத்தின் மூலம் இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு திசெம்பர் மாதம் இரண்டாம் நாளன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றது என்பதையும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பமானது இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் திகதி மு.ப.10.00 மணியாக நியமிக்கப்பட்டு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்றக் கூட்ட மண்டபத்தில் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கப்படுகின்றது என்பதையும் இத்தால் சகலரும் அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு திசெம்பர் மாதம் இரண்டாம் நாளாகிய இன்று கொழும்பில் வழங்கப்பட்டது.

அதியுத்தமனாரின் ஆணைப்படி,
பீ. பி. ஜயசுந்தர,
சனாதிபதியின் செயலாளர்.

நள்ளிரவுடன் பாராளுமன்றம் ஒத்திவைப்பு; ஜனவரி 03 இல் மீண்டும் கூடும்-Parliament Prorogued-From Midnight Today-Will be Commence on Jan 03rd, 2020-Extraordinary Gazette Issued


Add new comment

Or log in with...