கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீநேசன்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தும் துரதிஷ்டவசமாக வாய்ப்புக் கொடுக்கப்பட்டவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்கள். பெண்கள் கூட ஆண்களுக்குத்தான் அதிகமாக வாக்களித்திருந்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டு. காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 16 நாள் பெண்களுக்கெதிரான வன்முறை, எதிர்ப்பு செயல்வாதம் நிறுவனத் தலைவர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வாய்ப்புகள் கிடைக்கின்ற போது வாய்ப்புகளை வெற்றியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண் வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகின்றபோது பெண்கள் அமைப்புகள் பெண்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அநேகமாக பெண்கள் போட்டியிடுகின்றபோது பெண்கள் மத்தியிலிருந்தே விமர்சனங்கள் எழுகின்றன. ஆகவே இந்நிலை எதிர்வரும் காலங்களில் மாற வேண்டும்.
கூட்டமைப்பிலுள்ள 14 பாராளுமன்ற உறுப்பினர்களுள் தேசியப் பட்டியல் மூலமாக ஒரே ஒரு பெண் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலைமை காணப்படுகின்றது. ஆகவே செயற்திறனுடன் செயற்படக்கூடியவர்களும் கொள்கை வழி பயணம் செய்யக்கூடியவர்களுமே எங்கள் கட்சிக்கு அவசியமாகின்றனர். சில வேளைகளில் வெற்றிக்காக ஒரு கட்சி வென்றதன் பின்னர் உழைப்புக்காக ஒரு கட்சி என்று திரிகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில்தான் ஆண்களை தெரிவு செய்கின்றபோது கவனமாக தெரிவு செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.
இலங்கை உட்பட பல நாடுகளில் பெண்கள் அடையாள தலைமைத்துவமாக இருந்திருக்கின்றார்கள். அந்த தலைமைத்துவம் இலங்கையில் முதலாவது பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்ரடாரநாயக்கா மற்றும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா மூலம் வெளிப்படுகின்றது.
நிதியைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றது. அரசியல்தான் எங்களுக்கு இலகுவான வியாபாரம் என்று நினைத்தால் அதற்குரிய பாடத்தை எதிர்வரும் காலங்களில் மக்கள் முறையாக புகட்டிவிடுவார்கள். மட்டு. மாவட்ட அரசியலில் மக்களிடம் ஆணையைப் பெற்று வெற்றியானதும் விரும்பிய படி தலை கால் தெரியாமல் நடந்துகொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு கடந்த காலங்களில் மட்டக்களப்பு மக்கள் அருமையான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் 46,000 வாக்குகளைப் பெற்று வென்று வந்தவர்கள் தடம்மாறிப் போன பிற்பாடு 1400 வாக்குகளைப் பெற்று தோற்கடிக்கப்பட்ட நிலைமையும் காணப்படுகின்றது. இந்த பாடங்கள் தெரிந்தும் இவ்வாறானவற்றை புறக்கணித்து செயற்படுபவர்களுக்கு அடிக்கடி பாடங்கள் புகட்டப்பட்டு வருகின்றன.
எனவே பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். வருமானத்தை தேடுவதற்கு வழி வகைகள் இருந்தாலும் அதற்கும் அளவு இருக்க வேண்டும். ஆகவே மக்கள் மத்தியில் நாயகர்கள் போன்று செயற்படுகின்ற ஒரு தன்மையும், மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை செய்கின்றவர்கள் விதிவிலக்குகளாக நடந்தாலும் அவற்றை பொதுவிதிகளாக மாற்றிக்கொள்ள முடியாது.
நாங்கள் கட்சி ரீதியாக செயற்படுகின்றவர்கள். சில்லறைத்தனமாக நாங்கள் செயற்படமுடியாது. எங்களை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி எங்களுக்குரிய மதிப்பீடுகளை பணத்தால் மாற்றிவிட முயற்சிக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் கவனமாக கட்டுக்கோப்போடு செயற்பட வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். எங்களைப் பொறுத்தமட்டில் விற்பனை பண்டமாக சந்தைப்பொருளாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாறாது. ஒரு சில புறநடை விதிவிலக்குகள் இருக்கின்றன. அதற்கு அப்பால் நாங்கள் சரியாக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கின்றோம் என்றார்.
மண்டூர் குறூப் நிருபர்
Add new comment