இஸ்ரேலில் எத்தியோப்பிய யூத குடியேற்றம் ஆரம்பம்

 

இஸ்ரேலின் மீண்டும் திரும்புவதற்கான சட்டத்தின் கீழ் 63 எத்தியோப்பிய நாட்டு குடியேறிகள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளனர்.

அடுத்து ஐந்து ஆண்டுகளில் யூத வம்சாவழிகள் என்று கூறிக்கொள்ளும் 9,000 எத்தியோப்பியர்களை இஸ்ரேலில் குடியமர்த்தும் திட்டத்தின் முதல் கட்டமாகவே இவர்கள் இஸ்ரேலை அடைந்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு மாதத்திலும் 100 எத்தியோப்பிய குடியேறிகள் இஸ்ரேலில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பலஸ்தீன நிலங்களில் யூத குடியேற்றங்களை விரிவுபடுத்தி வரும் நிலையிலேயே அது வெளிநாடுகளில் இருந்தும் யூதர்களை குடியமர்த்தி வருகிறது.

இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய மீண்டும் திரும்புவதற்கான சட்டத்தின் கீழ் உலகெங்கிலும் உள்ள எந்த ஒரு யூதருக்கும் இஸ்ரேலில் குடியேற அனுமதி இருப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

1984 மற்றும் 1991 காலப்பகுதியில் இஸ்ரேல் பெரும் எண்ணிக்கையிலான எத்தியோப்பிய யூதர்களை குடியமர்த்தியது. இஸ்ரேலில் தற்போது சுமார் 135,000 எத்தியோப்பிய சமூகத்தினர் வாழ்கின்றனர்.

இதில் தற்போது குடியமர்த்தப்படும் எத்தியோப்பியர் பெலாஷ் முரா இனத்தவர்கள் ஆவர். இவர்கள் தம்மை யூத வம்சாவழிகள் என்று கூறிக்கொண்ட போதும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களாவர். இவர்கள் இஸ்ரேலுக்கு குடியேறியதும் யூத மதத்திற்கு மாற்றப்படவுள்ளனர். 


Add new comment

Or log in with...