நல்லாசான் லோகசிங்கத்தின் அகவை அறுபது மணிவிழா

பளிச்சென்ற சில்வர் கலரில் அந்த CD 200 HONDA மோட்டார் சைக்கிள் கச்சேரி_ நல்லூர் வீதி வழியாக வரும்; ஒஸ்லோ ரியூட்டரியில் மெல்லிய ஓசையுடன் உள்நுழையும்.

பொருளியல் ஆசான் லோகசிங்கம் மென்மையானதொரு புன்சிரிப்புடன் இறங்குவார்.

நேரம் தவறாமை, நாள் தவறாமை இரண்டும் அவரிடம் இருக்கும். அதே போல அணியும் ஆடைகளிலும் ஒரு நேர்த்தி இருக்கும். அவரது ஆசான் கிருஷ்ணானந்தன் சேர் போலவே இவரது பொருளியல் வகுப்பும் சுருக்கமான ஒரு விளக்கமாக இருக்கும்.

“நாட்டின் பொதுவிலை மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுதலே பணவீக்கமாகும். மறுவளமாகக் கூறுவதாயின் குறைந்தளவு பொருள்களைக் கூடியளவு பணம் துரத்திச் செல்லும் முரண்பட்ட நிலைமையே பணவீக்கமாகும்."

சொற்சிக்கனம், விளக்கம் ஆகியவை உள்ள அருமையான பாடக்குறிப்புகளாக இருக்கும்.

1988 ஓகஸ்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தேன். டிசெம்பரில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின. பல்கலைக்கழக அனுமதிக்கு அளவாக இருக்கும். சிலவேளை பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமலும் போகலாம். ஆகவே இரண்டாவது தடவை ஏ.எல் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவோமெனப் படிக்க ஆரம்பித்தேன்.

முதல் தடவை உயர்தரப் பரீட்சை எடுத்த போது பொருளியல் பேராசான் கிருஷ்ணானந்தன் சேரிடம் பயின்றேன். போரின் கொடிய கரங்களால் அவரது உயிர் 1988 நவெம்பரில் யாழ் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு முன்பாகப் பறித்தெடுக்கப்பட்டது.

அவர் பொருளியல் கற்பித்த இறுதி அணியென்ற துரதிஷ்டத்தை எமது 1988 அணி பெற்றது வரலாற்றின் துயரம் தான்.

லோகசிங்கம் சேர், மாணவர்களுடன் நட்பார்ந்த ரீதியில் பழகி மாணவர்களை நேசித்தார். மூன்று வேளை உணவு உண்பது என்பது பலருக்கு இயலாமல் இருந்த காலம் அது. தனது மாணவர்களது முகக்குறிப்பைப் பார்த்துத் தனிப்பட அழைத்துக் காசு கொடுத்து விடுவார். அம்மாணவர்கள் கடைக்குச் சென்று பசியாறுவார்கள்.

தனியார் கல்வி நிறுவனத்தைப் பணம் உழைக்கும் கூடமாக அவர் நினைக்கவில்லை. அறத்தோடு கல்வியைப் புகட்டிய நல்லாசானாகவும் இருந்துள்ளார்.

மாணவர்களுடன் தோழமை பூண்டு பழகி அவர்களது மனதை வென்றுள்ளார். ரியூசன் நிலையத்திற்கு வெளியிலும் அவர்களது சுகதுக்கங்களில் பங்குபற்றும் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்துள்ளார்.

முன்னர் ஒரு தடவை அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைக்குப் பொதுஅறிவு பாடத்தை வெள்ளவத்தையிலுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கற்பித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வகுப்பறையில் ஆங்கில மொழி மூலமாக உயர்தர வகுப்புக்குப் பொருளியல் பாடத்தை ஒருவர் கற்பித்துக் கொண்டிருக்கும் குரல் கேட்டது.

எனக்கு அறிமுகமான குரலாக உள்ளதே என எட்டிப் பார்த்தேன். அங்கு லோகசிங்கம் சேர் நிற்பதைக் கண்டேன். வகுப்பு முடிவடைந்ததும் கண்டு கதைத்தேன். தனது பிள்ளைகள் கொழும்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்க்க வரும் போது இலவசமாக இவ்வாறு கற்பிப்பது வழக்கம் என்றார். தமிழ்மொழி மூலமாகக் கற்பித்துக் கொண்டிருந்த அவர் ஆங்கிலமொழி மூலமான கற்பித்தலுக்குத் தன்னைத் தயார்படுத்தி உள்ளார். தேடல்,கற்றல், கற்பித்தல் எனும் சுற்றோட்டத்தைக் கடைப்பிடிப்பவரே நல்லாசான் எனலாம்.

நல்லாசான்களை ஏற்றிப் போற்றுவதில் வடமராட்சி மண் என்றுமே தனித்துவமானது. கற்றோரைப் போற்றி மதிக்கும் பண்புகளாலும், கற்றோரது நல்ல ஆசீர்வாதத்தாலுமே வடமராட்சி மண் கல்வியில் உன்னதமாக ஒளிர்கிறது போலும். அந்த வரிசையில் பொருளியல் பேராசான் மாணிக்கம் லோகசிங்கம் சேரின் அகவை அறுபதின் மணிவிழா 08.-07.-2023 ஆம் திகதியன்று பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா சிறக்க எனது வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.

வேதநாயகம் தபேந்திரன்...

கைதடி


Add new comment

Or log in with...