பிரான்ஸில் அமைதியை ஏற்படுத்த கடும் முயற்சி

வன்முறைகள் வெடித்துள்ள பிரான்ஸில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அங்கு ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. வன்முறைகளை நிறுத்துமாறு உயிரிழந்த இளைஞரின் பாட்டி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரான்ஸில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தமது அமைச்சரவையிடம் கூறியுள்ளார்.

அவர் பாராளுமன்றத் தலைவர்களையும் ஆர்ப்பாட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் 220க்கும் அதிகமான மேயர்களையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஞாயிறு (02) இரவு மக்ரோன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார். நாட்டின் கொந்தளிப்பான சூழலைக் கையாள வேண்டியிருப்பதால் அவர் ஜெர்மனிக்கான தமது உத்தியோகபூர்வ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இந்த வன்முறையில் கடைகள் தாக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் இருப்பதோடு கார்கள் மற்றும் பஸ் வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 45,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தொடர்ந்து வன்முறை நீடிக்கும் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பாரிஸ் புறநகர் பகுதிகளில் 78 பேர் கைது செய்யப்பட்டதோடு நேற்று அதிகாலை மேலும் 20 பேர் கைதாகியுள்ளனர்.

வன்முறைகளின் உச்சமாகக் கடந்த சனிக்கிழமை (1) பாரிஸ் புறநகரின் மேயர் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் காரால் மோதினர். அந்த வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது சிலர் வீட்டுக்குத் தீ வைத்தனர்.


Add new comment

Or log in with...