விருந்தோம்பலைப் பற்றி கடந்த ஞாயிறு நற்செய்தி எமக்கு ஆழமான புரிதலை தருகின்றது.
இந்தியாவிலும், இலங்கையிலும், பயணங்கள் மேற்கொள்ளும் அயல்நாட்டவர், நாம் வழங்கும் வரவேற்பினால் பிரமிப்படைவதைக் காணலாம்.
நமது வரவேற்பையும், விருந்தோம்பலையும் பற்றி அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியபிறகும் பேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். நமது கலாச்சாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் விருந்தோம்பல் பண்பு, அண்மைய ஆண்டுகளில், தேய்ந்து, மறைந்து வருவது, மனதை பாரமாக அழுத்துகிறது.
இத்தகைய ஒரு காலகட்டத்தில் தான் கத்தோலிக்கத் திருச்சபை விருந்தோம்பல் தொடர்பில் சிந்திக்க அழைக்கின்றது. அந்த வகையில் கடந்த ஞாயிறு மறையுரைகள் அதற்கான ஆழமான படிப்பினைகளை நமக்குத் தருகின்றன.
இந்தியப் பாரம்பரியத்தில், விருந்தினருக்கு உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டது. இவை இந்திய வேத நூல்களில் காணப்படுகின்றன.: "விருந்தினர், கடவுளுக்குச் சமமானவர்". இதையொத்த எண்ணத்தை, 'விருந்தோம்பல்' என்ற பிரிவில் திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு. அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்போர், வானவர் மத்தியில் நல்ல விருந்தினர் ஆவார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமை நாம் விவிலியத்தில் சந்திக்கிறோம். (தொடக்க நூல் 18:1-8) ஆபிரகாம் பெற்ற இந்த அற்புத அனுபவம், கிறிஸ்தவர்களின் அடிப்படை அனுபவமாக விளங்கவேண்டும் என்று, எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகம் நமக்கு அறிவுறுத்துகிறது:
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு. வந்திருக்கும் விருந்தினர் வானவராவதும், விருந்தினரை வரவேற்று, உபசரிப்பவர்கள், வானவர் நடுவே விருந்தினராவதும், விருந்தோம்பலின் அழகான விளைவுகள்.
இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் கடந்த ஞாயிறு முதல் வாசகமும், நற்செய்தியின் இறுதிப் பகுதியும் அமைந்துள்ளன.
சூனேம் நகரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இறைவாக்கினர் எலிசாவை வரவேற்று, உபசரித்ததை முதல் வாசகம் (2 அரசர் 4:8-11, 14-16) விபரிக்கின்றது.
உணவு படைப்பதோடு தொடங்கும் இந்த உபசரிப்பு, இறைவாக்கினர் வந்து தங்குவதற்கு உறைவிடம் உருவாக்கித்தரும் முயற்சியாக வளர்கிறது. அதுவும், சூனேம் நகரப் பெண்மணி, இறைவாக்கினருக்கென தன் வீட்டின் மேல்தளத்தில் புதிதாக அறை ஒன்றைக் கட்டி, அதை அவருக்கென ஒதுக்கி வைப்பதை அந்த வாசகம் விபரிக்கிறது. அப்பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, பரிசுத்த விவிலியத்தின் ஆய்வாளர், அருள்பணி யேசு கருணா பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை:
மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவதில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லோரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது.
இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம்.
இத்தகைய விரும்தோம்பலால் உள்ளம் நிறைவடைந்த இறைவாக்கினர் எலிசா, குழந்தைப்பேறு இன்றி தவித்த சூனேம் நகரப் பெண்ணுக்கு குழந்தை வரம் கொடுக்கும் ஆசீரோடு முதல் வாசகம் நிறைவு பெறுகிறது.
விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும், பெறுவோரும் ஆசீர்வாதங்களால் நிறைவர் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். ஒருவரை ஏற்றுக்கொள்பவர், வரவேற்று, உபசரிப்பவர், தகுந்த பலனைப் பெறுவார் என்பதை நற்செய்தியில், இயேசு, ஓர் உறுதிமொழியாக வழங்குகிறார்.
நற்செய்தியில் மத்தேயு பத்தாம் அத்தியாயத்தில் இறுதிப் பகுதி. இயேசு, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் (மத். 10:8) அதிகாரங்களை வழங்கும் சக்தி மிகுந்த சொற்களுடன், இயேசுவின் அறிவுரை ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து, தன் சீடர்கள் சந்திக்கப்போகும் ஆபத்துக்களைக் குறித்து இயேசு வழங்கும் எச்சரிக்கைகள், இப்பிரிவின் அடுத்த பகுதியாக அமைந்துள்ளது (மத். 10: 16-32).
சீடர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களை, மூடி மறைக்காமல் தெளிவாகக் கூறிய இயேசு, இப்பிரிவின் இன்னும் சில சவால்களை சீடர்கள் முன் வைக்கிறார். இதுவே, நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக ஒலிக்கின்றது. "தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்" (மத். 10:38) என்ற தெளிவான சவாலை விடுக்கும் இயேசு, கனிவு ததும்பும் சொற்களுடன் தன் அறிவரையை நிறைவு செய்கிறார்:
மத்தேயு 10: 40-42
உங்களை ஏற்றுக்கொள்பவர், என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை, அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர், இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை, அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர், நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும், தம் கைம்மாறு பெறாமல் போகார் என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
'ஏற்றுக்கொள்ளுதல்', அதாவது, 'வரவேற்று உபசரித்தல்', 'ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்' என்ற எண்ணங்களை இயேசு தன் சீடர்களிடம் கூறியபோது, தனது பணிவாழ்வில் கிடைத்த விருந்தோம்பலை அவர் உள்ளம் அசைபோட்டிருக்க வேண்டும்.
மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய நண்பர்களிடையே தான் பெற்ற வரவேற்பு, கானா திருமண விருந்து, தொழுகைக்கூடத் தலைவன் வீட்டில் கிடைத்த விருந்து, சமாரியப் பெண் தந்த குளிர்ந்த நீர்... இவை அனைத்தும் அவர் உள்ளத்தில் தோன்றியிருக்கும். தனக்குக் கிடைத்த விருந்தோம்பல் அனுபவங்கள், தன்னை வளமடையச் செய்துள்ளதுபோலவே, தன் சீடர்களின் வாழ்வையும் வளமையாக்கும் என்பதை அவர் உணர்ந்தார்.
இயேசு சொல்லித்தந்த விருந்தோம்பலும், வரவேற்பும், ஆதிக் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால், அது மிகையல்ல. விருந்தினர் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கும் வாய்ப்பை உருவாக்குவோம்.
- அருட்பணி எல்.எக்ஸ். ஜெரோம்
Add new comment