இலங்கையின் எரிசக்தித் துறையில் சீனாவின் பிரசன்னம் இன்றைய அரசியல் தளத்தில் ஒரு பேசு பொருளாகி இருக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பல்வேறு முதலீடுகளை சீனா செய்து வந்த நிலையில், தற்போது இலங்கையின் எரிசக்தி துறையில் தனது கால்களைப் பதிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்து சமுத்திரத்தின் புவியியல் அமைவிடம் காரணமாக இலங்கை நீண்டகாலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக, இலங்கையில் குறிப்பாக எரிசக்தி துறையில் சீனா தனது இருப்பையும் செல்வாக்கையும் ஆக்ரோஷமாக அதிகரித்து வருகிறது.
சீன முதலீடுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இலாபகரமானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் தோன்றினாலும், அது இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விடயங்களில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலைகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
எரிசக்தி துறையில் சீனா தனது ஊடுருவல்களை நடாத்த முனைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் எரிபொருள் துறையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதால் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதார மற்றும் மூலோபாய தளத்தில் பாரிய தாக்கங்கள் நிகழலாம் என்று பலரும் அபிப்பிராயம் கொள்கின்றனர்.
இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகளின் தாக்கங்கள், எதிர்காலத்தில் இலங்கைக்கு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
துறைமுகம், விமான நிலையம் போன்ற பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வந்த சீனா, தற்போது இலங்கையின் எரிசக்தி துறையிலும் கைவைத்துள்ள விவகாரம் புவியரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடுமையான நிதி மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அண்மையில் சீன எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக் நிறுவனத்துடன் 20 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து, விநியோகிக்க மற்றும் விற்பனை செய்ய அந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சினோபெக் நிறுவனம் இலங்கையுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
அதன்படி, சினோபெக் நிறுவனத்திற்கு அதன் கூடுதல் எரிபொருள் இருப்புக்களை சேமிப்பதற்காக சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) க்கு சொந்தமான சேமிப்பு தொட்டிகளும் வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகியவை இந்த நாட்டில் எரிபொருள் சந்தையில் நுழையவிருக்கும் ஏனைய இரண்டு நிறுவனங்களாகும்.
சினோபெக் தனது வர்த்தக நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் ஆரம்பிக்க வந்துள்ள போதிலும், யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியா மற்றும் ஆர்எம் பார்க்ஸ் போன்ற நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடவில்லை.
2003 ஆம் ஆண்டு வரை இலங்கையில் எரிபொருள் சந்தையானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கீழ் அரச ஏகபோக உரிமையாக இருந்து வந்தது. 2003ம் ஆண்டளவில் இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய விற்பனைப் பிரதிநிதிகளால் நடத்தப்படும் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை சினோபெக்கிற்கு ஒதுக்குவதுடன், கூடுதலாக சினொபெக் நிறுவனம் 50 புதிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் நிறுவவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இலங்கை, தனது நெருக்கடியான பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவர இன்னும் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த வெளிநாட்டு நிறுவனங்களுடனான எரிசக்தி வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் வர்த்தகத்தின் ஏகபோக உரிமையை, மறுசீரமைத்தல் என்ற போர்வையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியிருப்பதாக தொழிற் சங்கங்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சீனாவின் சினோபெக் நிறுவனம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல முதலீடுகளை செய்ய உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவும், அமெரிக்காவும் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு மத்தியில், நாட்டின் துறைமுகம் மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீட்டை ஒருங்கிணைப்பதற்கான சீனாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஹம்பாந்தோட்டையில் தொழில் வளையம் ஒன்றை அமைப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சீனாவால் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தைச் சுற்றி 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் வளையம் ஒன்றை அமைக்கும் சீனாவின் திட்டம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சூயஸ் கால்வாய்கும் மலாக்கா நீரிணைக்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்த முக்கிய இரண்டு நீரிணை வழியாக இடம்பெற்று வருகின்றன.
சூயஸ் கால்வாயும் மலாக்கா ஜலசந்தியும் பெற்றுள்ள மூலோபாய இடத்திற்கு சமமான நிலையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்தள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கொண்டு வர சீனா முயற்சி செய்கிறது. இலங்கையின் இந்த புவியியல் அமைவிடம் காரணமாகவே சினோபெக் நிறுவனம் ஹம்பாந்தொட்டையை இலக்கு வைத்து செயற்பட ஆரம்பித்திருக்கிறது.
சைனா பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படும் சினோபெக், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளதோடு, எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் மிகப்பெரிய விநியோக நிறுவனமாகவும் செயற்பட்டு வருகிறது.
சீனாவில் இரண்டாவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராகவும் இது இருக்கிறது. அத்தோடு சினோபெக் உலகின் முன்னணி எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கொண்ட நிறுவனமாகும். கடந்த 2021 ம் ஆண்டு “ஃபோர்ச்சூன் குளோபல்” சஞ்சிகை வெளியிட்ட 500 நிறுவனங்களின் பட்டியலில் சினோபெக் 5வது இடத்தைப் பிடித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கையில், சீன சினோபெக் நிறுவனத்தின் இந்த நகர்வின் பின்னணியில் இருக்கும் அரசியலை அமெரிக்காவும், இந்தியாவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷமான அணுகுமுறை இலங்கையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய நியாயமான கவலைகளை எழுப்பியுள்ளதோடு பிராந்திய மற்றும் புவியரசியலிலும் பதற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.
- ஆதவன்
Add new comment