டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் அபாயம்!

மக்களை எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

நுளம்புகள் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதும், பாதுகாப்புப் பெறுவதும் அவசியம்

டெங்குநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு ஒழிப்பு திட்டத்தினை அரச, தனியார் துறைகள் மற்றும் பொதுமக்களையும் ஒன்றிணைத்தவாறு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

எதிர்வரும் பருவகாலத்தைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடும். பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண முடியும். அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

டெங்குநோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயாளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறுபிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு என்பது ஒருவகை வைரஸ் நோயாகும். டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் குத்தும் பட்சத்தில் அந்த நுளம்பினால் ஏனையவர்களுக்கு டெங்கு நோய் பரவுகின்றது.

நுளம்புகள் பெருகக் கூடிய பகுதிகளை துப்புரவாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். தூய்மையான நீர் சேரும் பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் பெருகும். பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக், டயர், பூச்சாடிகள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் இடங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும். இப்பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை துப்புரவாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல் நுளம்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு இலங்கானவர்கள் மற்றையவர்களுக்கு பரவாமலிருக்கும் வகையில் நுளம்பிலிருந்து பாதுகாப்பு பெறுவது அவசியமாகும். உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பயன்படுத்த வேண்டும். பூச்சு விரட்டித் திரவியங்கள் ஊடாகவும் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். எவ்வாறாயினும் இந்த முறை 100 சதவீதம் பலன் தராது.

பிரதேச சபைகள், நகரசபைகள், பொதுச்சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவுகள், பாதுகாப்புப் பிரிவுகளின் பங்களிப்புடன் நுளம்பு பெருகும் இடங்களை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. டெங்குநோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் எதிர்வரும் வாரங்களில் விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அப்பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கக் கூடும். எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டும். பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாட்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும். அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த வேண்டும்.

நீங்கள் வசிக்கும் சுற்றாடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். நோய் கட்டுப்பாட்டினை ஒருவரால் மாத்திரம் செய்துவிட முடியாது. இந்நாட்டில் அனைவரிதும் ஒத்துழைப்பு தேவை.

டெங்கு நோய்க்கு இலக்கானவரெனின் கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வு தேவை. அவ்வாறு இல்லாவிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கும். காய்ச்சல் ஏற்படும் போது பெரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த ஒரு காய்ச்சல் நோயாளிக்கும் வேறு மருந்துகளை வழங்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கவில்லை. சில நேரங்களில் பெரசிடமோல் மருந்தினால் நோய் முழுமையாக குணமடையாமல் இருக்கலாம்.

அந்தச் சந்தர்பங்களில் நோயாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. ஓய்வெடுப்பதால் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும். இளநீர்,தேசிக்காய், தோடம்பழம், ஜீவனி உள்ளிட்ட திரவ வகைகளை உட்கொள்வது மிகவும் உகந்தது.   

Add new comment

Or log in with...