வாழும் நற்செய்தியாக விளங்கும் புனிதர்கள் பேதுரு, பவுல் திருவிழா

ஜுன் 29ல் திருச்சபை சிறப்பிக்கின்றது

திருச்சபையின் தலை சிறந்த தூண்களான புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் திருவிழாவை கத்தோலிக்க திருச்சபை ஜூன் 29 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது

பேதுரு தன் இனமக்களுக்கும், பவுல் பிறஇன மக்களுக்கும் நற்செய்தி அறிவித்தார்கள். இரு வேறு குணநலன்களை கொண்டிருந்தாலும், தங்களது ஆர்வத்தில் குறைவில்லாது இவர்கள் பணியாற்றி வந்தார்கள் என்பதனை வரலாறு நமக்கு உறுதி செய்கின்றது.

ஆளுமையில் மட்டுமல்லாமல், ஆற்றிய பணியிலும் இருவரும் வேறுபட்டு இருந்தார்கள்.

புனித பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, யூதர்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றினார். தூய பவுலோ யூதர்களைக் கடந்து, புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தார். தூய பவுல் ஆற்றிய பணிகள், மேற்கொண்ட பயணங்கள், எழுதிய நூல்கள் எல்லாம் இன்றைக்கும் நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தருகிறது.

இவர்கள் இருவரும் ஆளுமையில், ஆற்றிய பணியிலும் வேறுபட்டு இருந்தாலும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இருவருமே கி.பி. 67 ஆண்டில்தான் நீரோ மன்னனால் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவர்கள் இருவரது சாட்சிய வாழ்வும் நமக்கு சிறந்த பாடம்.. தூய பேதுருவும், பவுலும் பலவீனமானவர்களாக/ வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் அவர்களை வலுவுள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக மாற்றுகின்றார்.

பேதுரு படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகின்றார்.

தூய பவுலோ தொடக்கத்தில் திருச்சபையைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார்.

2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், “எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மும்முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால், அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார் தூய பவுலடியார்.

தூய பவுலடியார் வலுவற்றவர். ஆனாலும் அவருடைய அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்து, தான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார்.

பேதுருவையும், அவரோடு இருந்தவர்களையும் தலைமைச் சங்கத்தார் நைய்யப்புடைத்து, ஆண்டவர் இயேசுவை இனிமேல் அறிவிக்கக்கூடாது என்று சொன்னபோதும் அவர் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத் தவறவில்லை. அதேபோன்று பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக உறுதியாக இருகின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலடெல்பியா என்ற நகரத்தில் ஜெரார்டு என்ற கோடிஸ்வரர் வாழ்ந்துவந்தார். அவருக்குக் கீழ் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வந்தார்கள். ஒரு சனிக்கிழமை அன்று அவர் தன்னுடைய பணியாளர்களிடம், “நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, நம்முடைய நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து பொருட்கள் வருகின்றன. ஆதலால் பணியாளர்கள் யாரும் விடுமுறை எடுக்காமல் தவறாது வரவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அப்போது பணியாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து, “நாளை ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள். கோவிலுக்குச் செல்லவேண்டும். அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெரார்டுக்கு கோபம் தாங்கமுடியவில்லை. உடனே அவர் அந்தப் பணியாளரிடம், “உன்னை நான் இப்போதே வேலையிலிருந்து நீக்குகின்றேன். அதனால் காசாளரிடம் சென்று, உனக்கான தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே போய்விடு” என்று சத்தம் போட்டார்.

அந்தப் பணியாளர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தனக்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மேலாளர் ஜெரார்டை அணுகி, “என்னுடைய வங்கியில் பணிபுரிய ஒரு நேர்மையான மனிதர் வேண்டும். உமக்குத் தெரிந்து அப்படி யாராவது நேர்மையான மனிதர் இருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு ஜெரார்டு, தன்னுடைய நிறுவனத்திலிருந்து நீக்கியவரைப் பரிந்துரைத்தார். ஏனென்றால் அவர் நிர்வாகம் சொன்னதைக் கேட்காவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையில் வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவருக்கு அந்த வேலையைப் பரிந்துரைத்தார்.

எல்.எஸ்


Add new comment

Or log in with...