- உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை
- விடுமுறையில் ATM மூலம் பணம் மீளப் பெறுவது உள்ளிட்டவற்றில் சிக்கல் இல்லை
ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி (2337/18) வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்காக குறித்த விடுமுறை தினத்தை அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 03 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜூன் 30 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய தினங்கள் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை தினமாக உள்ள நிலையில், அன்றைய தினத்தையும் விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம் குறித்த கால அவகாசத்தை ஏற்படுத்திள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேவளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்காக குறித்த நடவடிக்கையின் அடிப்படையில், நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்பிலிடப்பட்ட பணம் மற்றும் ATM இயந்திரங்கள் மூலம் பணம் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு அத்தியாவசியமான வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி விடுமுறை அறிவிப்பால், குறிப்பாக வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகள், ATM, ஒன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள், இணைய வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும். விடுமுறை நாட்களில் சில வங்கிகள் செயற்படுவதை நாம் அறிவோம். வார இறுதி வங்கி என்று அவை அழைக்கப்படுகிறது. குறித்த வங்கி பரிவர்த்தனைகளுக்கும் எந்த தடையும் இல்லை. நீங்கள் சாதாரண வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது போன்ற நீண்ட வங்கி விடுமுறைகளில் கூட மக்கள் தங்கள் வங்கித் தேவைகளை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
Add new comment