ரூ. 64 கோடிக்கும் அதிக போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

- உருளைக்கிழங்குடன் குளிரூட்டப்பட்ட கொள்கலனிற்குள் கடத்தல்
- விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில் கொள்கலனை திருப்பி அனுப்ப முயற்சி
- ஜனவரியில் பதிவு செய்த குறித்த நிறுவனத்தின் 3ஆவது இறக்குமதி

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்குடன் வந்த கொள்கலன் ஒன்றில் 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் தெரு மதிப்பு ரூ. 64 கோடி 77 இலட்சத்து 20 ஆயிரம் (ரூ. 647,720,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அதிகாரிகள் குழுவினால்  நேற்றையதினம் (21) குறித்த கொள்கலன் சோதனையிடப்பட்ட போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த 'வைற் ஜூலியட்' (Wide Juliet) எனும் குளிரூட்டப்பட்ட கொள்கலனிலிருந்தே குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு குறித்த கொள்கலன் கைப்பற்றுவதற்கு தயாரான நிலையில், கொழும்பில் உள்ள குறித்த இறக்குமதியாளர் உடனடியாக கொள்கலனை மீண்டும் பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்ப தயாராகியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாகவே கொள்கலனை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் அதில் விசேட அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பொருட்களை மீட்க வந்த அதன் கொள்கலன் மீட்பு இலிகிதர், இறக்குமதியாளர் உள்ளிட்ட இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 3 சந்தேகநபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதற்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

குறித்த இறக்குமதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது அந்நிறுவனத்தின் 3ஆவது இறக்குமதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர்.


Add new comment

Or log in with...