உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை

- பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறாதீர்கள்

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயம், எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்பிற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படாத வகையில் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு உகந்த மிகவும் சிறந்த மறுசீரமைப்பிற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையம் இன்று (19) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவுக்கும் போதே ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கம் எப்போதும் பொறுப்புடன் செயல்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார். மத்திய வங்கியும் நிதி அமைச்சும் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. குறிப்பாக நம் நாட்டின் வங்கிக்கட்டமைப்பு, நிதிக்கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க அவசியமான மறுசீரமைப்பிற்கு உகந்த தீர்வுகளை அனைவரும் தேடுகின்றனர். இது தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுத்தவுடன், பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கத் தயாராக உள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இது சந்தை நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த மறுசீரமைப்பு தொடர்பாக சந்தேகங்களை எழுப்பும் அறிக்கைகளை வெளியிடாமல் இருந்தால் தான் , நமது நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை நாம் தொடர்ந்து பராமரிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது முக்கியம். இந்த விடயங்கள் அனைத்தையும் பற்றி, ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் குறிப்பாக வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறந்த புரிதல் ஏற்படும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தற்போதைய பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் அரசியல் மேடைகளில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் விமர்சிக்கும் குழுக்களுக்கு ஒரு வேலைத்திட்டமோ தேவையோ அல்லது திறனோ இருந்தால், அந்த சவாலை எதிர்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அந்த சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே ஏற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை மக்களுக்கு அறிவித்துள்ளார். பொறுப்பை ஏற்ற தலைவர் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி வரும் இந்த தருணத்தில் பொறுப்பை ஏற்காதவர்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பியின் மேடைகளில் இந்த பொருளாதாரத்தை கையாள்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் அந்த அறிக்கைகள் எதிலும் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய எந்த யோசனையும் இல்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு இல்லாமல் ஒரு தீர்வை எட்டுவதே அவர்களின் நோக்கம். சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடற்ற தீர்வு என்ன? சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி இந்த நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எந்த நாடு தீர்வு வழங்கும்? சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி தீர்வை வழங்குவதாக யாராவது கூறினால் அவர்களிடம் தீர்வு இல்லை என்று தான் அர்த்தம். இன்று நாம் கடினமான ஒரு காலத்தை கடந்துவிட்டோம். இந்த கடினமான காலம் படிப்படியாக முடிவுக்கு வரும் நிலைக்கு இன்று வந்துள்ளோம்.எதிர்மறை 7.8 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் எதிர்மறை 3 ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

ஆனால், அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதனை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஒரு நல்ல, சாதகமான ஆண்டை நோக்கி நகர்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். இதுவரையிலான பயணத்தில், எதிர்பார்த்ததை விட அதிக பலன்களை எங்களால் எட்ட முடிந்துள்ளது. எனவே, அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைத் தொடர வேண்டியது அவசியமாகும். மேலும், நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படல், ஊழல், மோசடி போன்றவற்றிற்கு இடமளிக்காமை போன்ற விடயங்களில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம், தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இன்று ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரம், இலங்கையின் பொருளாதாரம் குறித்தும், நிர்வாகக் கட்டமைப்பு, நிதிக் கட்டமைப்பு தொடர்பாக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வாரமாக மாறும். வரவுசெலவுத்திட்ட அலுவலகம் தொடர்பான சட்ட முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் கலந்துரையாடி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, நமது நாட்டில் ஊழல், முறையற்றதன்மை மற்றும் வீண் விரயத்தை ஒழிக்கும் வகையில், ‘ஊழலுக்கு எதிரான சட்ட முன்மொழிவு புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த விடயங்கள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை. நாட்டின் வேலைத்திட்டம் மற்றும் செயல்பாட்டில் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் உருவாக்க இவை காரணங்களாக அமைகின்றன. இந்த சட்ட முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டால், நாட்டின் நிதிச் சந்தை மற்றும் முதலீடுகள் பலம் பெறும். இது இலங்கை பற்றிய மதிப்பீடு செய்யும் நிறுவனங்களின் கருத்தை மாற்றுவதற்கும் காரணமாகிறது.

செப்டெம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள முதல் மதிப்பாய்வில், நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் ஆகியவற்றை முன்வைக்க உள்ளோம். அதில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். வருமானத்தில் சிறிதளவு குறைவு ஏற்பட்டாலும், அதற்கான வேறு பல்வேறு மாற்று நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது. அதன்படி, முழுமையான பொருளாதார செயல்முறையும் தற்போது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதை நாட்டு மக்கள் உண்மையில் உணர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அரசாங்கம் என்ற வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். மேலும், இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக யாராவது செயல்பட்டால் அல்லது இன்று உருவாகியுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்ய அவர்கள் செயல்பட்டால், அதன் விளைவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு அனுபவித்த பலவீனமான பொருளாதாரத்தை விடவும் மோசமாக இருக்கும். குறுகிய கால துன்பங்கள் இருந்தாலும், நீண்டகாலத்திற்கு நாடு புதிய பாதையில் சென்று, மீண்டும் இது போன்ற நெருக்கடிகள் ஏற்படாத வகையில் தெளிவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்.

நமது நாட்டில் இரண்டு குழுக்கள் உள்ளன. ஒரு பிரிவினர், இந்த பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் அவதிப்பட்டு வருவதைக் கண்டு, அதனைத் தங்கள் அரசியல் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியாக பயன்படுத்திக்கொள்கின்றனர். மற்றைய குழு, நாடு என்ற வகையில் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறது. ஒரு குழுவினர் தவறான தகவல்களின் அடிப்படையில் தவறான செய்திகளை சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் ஒரு அரசாங்கமாக, சரியான தரவு மற்றும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு எப்பொழுதும் உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.


Add new comment

Or log in with...