ஐ.நா. ஆர்ப்பாட்ட வழக்கு; ஆஜராகாத விமலுக்கு பிடியாணை

- பிரதிவாதிகள் மாறி மாறி இதையே செய்வதாக நீதவான் விசனம்
- தொடர்ந்தும் நீடித்தால் விளக்கமறியலில் வைக்க நேரிடுமென எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அவருக்கு எதிரான வழக்கொன்றில் அவர் ஆஜராகாமையே இதற்கான காரணமாகும்.

2016 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடரபான வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் ​​முதலாம் பிரதிவாதியான விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை. வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியான வீரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவரது சட்டத்தரணி நீதிமன்றில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தார்.

இவ்வழக்கின் ஏனைய பிரதிவாதிகளான, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர, ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேநாயக்க ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிவாதிகள் ஒவ்வொருவரும் மாறி மாறி நீதிமன்றத்திற்கு ஆஜராகாததால், இந்த வழக்கை விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நீதவான் இதன் பாது குறிப்பிட்டார்.

பிரதிவாதிகள் இவ்வாறு செயற்பட்டால் அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் நீதவான் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...