புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கிய 5 வயது சிறுவன்; கைதான பாட்டனாருக்கு பிணை

முல்லேரியாவில் ஐந்து வயதுச் சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் பாட்டனார், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தலா ரூ. 3 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் இடம்பெறும் போது, ​​குழந்தை பாட்டனாரின் பாதுகாப்பில் இருந்த நிலையில், சிறுவனுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (10) இரவு முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட 65 வயதுடைய குறித்த நபரை நேற்று (11) புதுக்கடை இலக்கம் 06 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

51 வயதான குறித்த சந்தேகநபர் புதுக்கடை நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம் (10) ஆஜர் செய்யப்பட்டபோது அவரை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குறித்த சிறுவன் உயிரிழந்தமை தொடர்பான முக்கிய விடயங்களை சந்தேகநபர் தமது வாக்குமூலத்தின்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்படி, சிறுவன் உண்மையில் கண்ணாடி போத்தல் துண்டுகளால் ஏற்பட்ட வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என்றும் புல் வெட்டும் இயந்திரத்தின் அலகுகள் தவறுதலாக சிறுவனைத் தாக்கியதால் சிறுவன் இறந்துவிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் இறந்தமை காரணமாக, பீதியடைந்த நிலையில் தாம், உடைந்த கண்ணாடி போத்தல்களின் துண்டுகளை சிறுவனின் உடலின் அருகில் வைத்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று (08) முல்லேரியா- ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்து ஐந்து வயதுடைய ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்தே சந்தேகத்தில் புல்வெட்டும் பணியாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...