இம்ரான் கானுக்கு பிணை

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ஆம் திகதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இருப்பினும் அவருக்கு பல்வேறு வழக்குகளிலும் பிணை கிடைத்தது. இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அப்துல் ரஸாக் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இம்ரான் கான்தான் காரணம் என்று அப்துல் ரஸாக் ஷாரின் மகன் குற்றம் சாட்டினார். இம்ரானுக்கு பலூகிஸ்தான் நீதிமன்றத்தில் தனது தந்தை வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்துல் ரஸாக்கின் மகன் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 14 நாட்களுக்கு இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

குவெட்டா நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அப்துல் ரஸாக் கடந்த 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். 70 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அவர் மீது 150க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...