எல்.பி.எல் ஏலத்தை நடத்த சாரு ஷர்மாவுக்கு அழைப்பு

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) வீரர் ஏலத்தில் ஏலம் விடுபவராக புகழ்பெற்ற இந்திய வர்ணனையாளர் சாரு ஷர்மா செயற்படவுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான முதலாவது வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. “இந்த ஏலத்தில் நாம் சாரு ஷர்மாவை அழைத்துள்ளோம். அவர் சில உள்ளூர் வர்ணனையாளருக்கு உதவியாக இருப்பார்” என்று இந்தத் தொடரின் பணிப்பாளரான சமன்த தொடன்வெல தெரிவித்துள்ளார்.

2022 இந்திய பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஏலதாரராக செயற்பட்ட ஹக் எட்மிஸ் மயங்கி விழுந்ததை அடுத்து அந்த ஏலத்தை சாரு ஷர்மாவே நடத்திச் சென்றார்.

நான்காவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 30 தெடக்கம் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.

வீரர்களை வாங்குவதற்காக இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 500,000 டொலர்களை செலவிட முடியும். இதன்படி மொத்தமாக 2.5 மில்லியன் தொடர்களை செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...