போத்தல் வெட்டிய காயத்துடன் மீட்கப்பட்ட சிறுவன்; கைதான புல் வெட்டும் நபர் வாக்குமூலம்

- புல் வெட்டும் மாமாவுடன் கவனமாக இருப்பேன் என கூறிய சிறுவனுக்கு அவரே எமனானார்

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் வேலைத்தளம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

51 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.

புல் வெட்டும் இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது, ​​குழந்தையின் மீது அதன் பிளேட் தாக்கியதாகவும், இதனால் பயந்து கண்ணாடி போத்தலால் குத்தப்பட்டு குழந்தை இறந்ததாக காட்ட முயற்சித்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (08) மாலை முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலபே ஹல்பராவ பிரதேசத்தில் வேலை செய்யும் தளம் ஒன்றில் சிறுவன் ஒருவனின் சடலம் ஒன்று காணப்படுவதாக முல்லேரியா பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஹல்பராவ பகுதியைச் சேர்ந்த 5 1/2 வயது ஜொனாதன் மார்க் பொன்சேகா எனும் சிறுவனின் சடலமே இவ்வாறு இரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தான்.

சிறுவனின் வயிற்றில் பாரிய வெட்டுக் காணம் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் இரத்தக் கறையுடன் உடைந்த கண்ணாடி போத்தல் ஒன்றும், அருகில் குழந்தையின் செருப்பு ஒன்றும் காணப்பட்டுள்ளதோடு, மற்றை செருப்பு குழந்தையின் காலில் காணப்பட்டிருந்தது அவதானிக்கப்பட்டது.

இம்மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணை நேற்றுமுன்தினம் (08) இரவு இடம்பெற்றதுடன், முதற்கட்ட விசாரணையில் சிறுவன் கண்ணாடி போத்தல் கண்ணாடிகளால் குத்தப்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்றிரவு முல்லேரியா தொற்று நோய் மருத்துவமனையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த சிறுவன் இறப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு, சிறுவனை வேலை செய்யும் தளத்தில் பார்த்ததாக அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளதோடு, அப்போது அருகில் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முல்லேரியா மரண விசாரணை அதிகாரி சன்ன பெரேராவும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு, நேற்று (09) சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனின் வயிற்றின் இடது பக்கம் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இறந்த குழந்தையின் தந்தை தனித்தனியாக வசித்து வருவதாலும், தாய் பகலில் வேலைக்கு செல்வதாலும், குழந்தையை பாட்டி மற்றும் தாத்தா கவனித்து வந்துள்ளனர். தாத்தா விபத்து நடந்த இடத்தில் காவலாளியாக பணிபுரிகிறார், ஆனால் சம்பவதினத்தில் அவர் வேறொரு விடயமாக சென்றிருந்தார். தாத்தா சிறுவனை அருகில் உள்ள வீட்டில் விட்டுச் செல்ல ஆயத்தமான போதிலும், "தாத்தா போய் வாருங்கள், நான் புல் வெட்டும் மாமாவுடன் கவனமாக இருப்பேன்” என தெரிவித்துள்ளான்.

இந்நிலையில் புல் வெட்டிக்கொண்டிருந்தவர், குழந்தை கண்ணாடி போத்தலின் மேல் விழுந்து இறந்துவிட்டதாக அருகில் வசிப்பவருக்குத் தெரிவித்துள்ளார். உடைந்த கண்ணாடி போத்தல் பாகங்களுக்கும், குழந்தை இறந்து விழுந்த இடத்துக்கும் இடையே உள்ள இடைவெளி, நான்கு அடியாக இருந்தாலும், அந்த இடைவெளியில், தரையில் இரத்தக்கறை எதுவும் இல்லாதது, பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இவ்வளவு சிறிய சிறுவன் உடலுக்கு அடியில் வீழ்ந்து ஒரு போத்தல் சிறிய துண்டுகளாக உடைய முடியாது என்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர். இதனடிப்படையில், இது கொலையா என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக குழந்தையின் தாத்தா மற்றும் குழந்தை இறந்த போது புல் வெட்டிய நபரிடம் முல்லேரியா பொலிஸார் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொட்டாவ பகுதியை சேர்ந்த புல் வெட்டும் நபர் பொலிஸாரிடம் நடந்தவற்ற தெரிவித்துள்ளார்.

தனது புல்வெட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிபார்த்தபோது, ​​அருகில் இருந்த கண்ணாடி போத்தல் அதில் பட்டு உடைந்ததாகவும், கண்ணாடி போத்தல் உடைந்து சிதறுவதை அவதானித்ததைத் தொடர்ந்து இயந்திரத்தின் வேகமாக அடுத்த பக்கத்திற்கு எடுத்ததாகவும், ​​அது அருகில் இருந்த குழந்தையின் வயிற்றில் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காயங்களுடன் சிறுவன் கீழே வீழ்ந்ததால் பயந்து போனதாகவும் புல் வெட்டும் நபர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடைந்த கண்ணாடி போத்தலை, வைத்து அதன் மூலம் இறந்ததை உணர்த்தும் வகையில் செயல்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 119 அவசர இலக்கத்திற்கு அழைத்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்ததாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நேற்று பிற்பகல் முல்லேரியா பொலிஸார் குறித்த புல் வெட்டும் நபரை கைது செய்துள்ளனர்.

51 வயதான குறித்த நபரை இன்று (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...