தென்னாபிரிக்க ஏ அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இலங்கை ஏ அணி

இலங்கை ஏ அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதியான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க ஏ அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றியது.

பல்லேகலவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணி வெறுமனே 7 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அஷேன் பண்டார மற்றும் சஹன் ஆரச்சிகே மத்திய வரிசையில் ஓட்டங்களை அதிகரித்தபோதும் அது சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போதுமாக அமையவில்லை.

அஷேன் பண்டார 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு ஆரச்சிகே 103 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 60 ஓட்டங்களை எடுத்தார். எனினும் வேறு எவரும் 20 ஓட்டங்களைக் கூட பெறவில்லை.

இதனால் இலங்கை ஏ அணி 42.3 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது அபாரமாக பந்துவீசிய கெரால்ட் கொட்சி 5 விக்கெட்டுகளை பதம்பாத்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க ஏ அணி 35.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டிரிஸ்டான் ஸ்டரப்பே 58 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை ஏ அணி சார்பில் டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாபிரிக்க ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையே அடுத்து இரு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதன் முதல் போட்டி வரும் ஜூன் 12 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...