உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இலங்கை அணி இன்று சிம்பாப்வே பயணம்

மஹேல ஜயவர்தனவும் இணைகிறார்

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிக்காக இன்று (09) சிம்பாப்வே புறப்பட்டுச் செல்லும் இலங்கை குழாத்தில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாம் நேற்று (08) பிற்பகல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அண்மையில் நிறைவடைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட ஒருநாள் குழாத்தின் 15 வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது. இதில் மத்தியூஸ் மாத்திரம் இணைக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போது இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராகவும் செயற்படும் மஹேல ஜயவர்தனவும் இணைந்துள்ளார்.

ஐ.சி.சி தொடர் ஒன்றில் பங்கேற்பதற்கான நெறிமுறையின்படி, உதவி ஊழியர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழாம் ஒன்றே சிம்பாப்வே செல்லவுள்ளது. இதில் இரு சிறப்பு உதவி உறுப்பினர்களான ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணர்கள் இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது.

“ஊட்டச்சத்து நிபுணர் (டொக்டர் ஹஷான் அமரதுங்க) மற்றும் உளவியல் நிபுணர் (டொக்டர் பேடினன் பெரேரா) இருவரும் அணியுடன் வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். நாம் மட்டுப்படுத்தப்பட்ட உதவி ஊழியர்களையே சிம்பாப்வேயுக்கு அனுப்புகின்றபோதும், எமது அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றால் நிச்சயம் நாம் அவர்களை அனுப்ப முயற்சிப்போம்” என்று இலங்கை கிரிக்கெட் ஊடகப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க தேர்வாளராக இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார்.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை, அயர்லாந்து, ஓமான், ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பி குழுவில் இடம்பெற்றுள்ளது. ஏ குழுவில் மேற்கிந்திய, தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, சிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

இலங்கை குழாம்: தசுன் ஷானக்க (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), பத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண.


Add new comment

Or log in with...