- கண்ணாடித் துண்டுகளால் குத்தப்பட்ட காயங்களுடன் மீட்பு
கண்ணாடித் துண்டுகளால் குத்தப்பட்ட காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நேற்று (08) மாலை முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹல்பராவ பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக 119 பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முல்லேரியா பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மாலபே, ஹல்பராவவை வசிப்பிடமாகக் கொண்ட 5 வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
உயிரிழந்த சிறுவனின் தந்தை தனியாக வசிப்பதாலும், தாய் வேலைக்குச் செல்வதாலும், சிறுவன் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில், ஹல்பராவ பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றின் முன்பாக உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் குத்திக் கொலை செய்யப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சட்ட வைத்திய அதிகாரியினால் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா தொற்று நோய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் முல்லேரியா பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment