உக்ரைனின் பிரதான அணை வெடித்து பாரிய வெள்ள அபாயம்

ரஷ்யா, உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

தெற்கு உக்ரைனில் பரவலாக வெள்ளத்தை ஏற்படுத்தி இருக்கும் அணை ஒன்று தகர்க்கப்பட்டது தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சோன் பிராந்தியத்தில் உள்ள சோவியட் காலத்து நோவா அணையை ரஷ்ய படை குண்டு வைத்துத் தகர்த்ததாக உக்ரைனிய இராணுவத்தின் தெற்கு கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அணையை சுற்றி வெடிப்புகள் இடம்பெறுவது மற்றும் அதன் வழி நீர் பாய்ந்து செல்வதை காட்டும் உறுதி செய்யப்படாத வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 30 மீற்றர் உயரம் மற்றும் 3.2 கி.மீ நீளம் கொண்ட இந்த அணை டினிப்ரோ நதியில் 1956 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிருந்து 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்த கிரிமியா பிராந்தியம் மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சபோரிசியா அணு உலைக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது.

“நீரின் வேகம் மற்றும் அளவு அதன் அழிவின் அளவை காண்பிப்பதோடு நீரில் மூழ்கக் கூடிய பகுதிகளை காட்டுவதாகவும் உள்ளது” என்று உக்ரைன் இராணுவம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் ஷெல் குண்டு தாக்குதலின்போதே இந்த அணை சேதமடைந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பயங்கரவாதச் செயல் என்று ரஷ்ய கட்டுப்பாட்டு நகர மேயர் நவொக் கஹவ்கா குற்றம்சாட்டினார். உக்ரைனிய தாக்குதல்களுக்கு ரஷ்யா பயங்கரவாதம் என்றே கூறி வருகிறது.

அணையை சுற்றியுள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து மணி நேரத்தில் நீர் மட்டம் ஆபத்தான நிலையை எட்டும் என்று நேற்று (06) எச்சரிக்கப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...