சென்னை - இலங்கை சர்வதேச சொகுசு சுற்றுலா கப்பல் சேவை

- மத்திய அமைச்சர் சர்வானந்த ஆரம்பித்து வைத்தார்

சென்னையிலிருந்து இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் சென்னையில் திங்களன்று ஆரம்பித்து வைத்தார். சென்னை, எண்ணூா் காமராஜர் துறைமுகங்களில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயற்பட்ட நிறுவனங்களுக்கு, பாராட்டு விழா சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இச்சேவையை ஆரம்பித்து வைத்தார்.

சென்னை, இலங்கையின் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களிடையே இக்கப்பல் பயணிக்கவுள்ளது. எம்.வி.எம்பிரஸ் என்ற இச்சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை அமைச்சர் சர்வானந்த சோனோவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கால இடைவெளியின்றி தொடர்ந்து இயக்கப்படும். தொடர்ச்சியாக, சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கப்பலை இயக்குவது என்பது சென்னை துறைமுக வரலாற்றில் முதல் முறையாக செயற்படுத்தப் பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களை இணைக்கும் வகையில் இக்கப்பல் இயக்கப்படும். இந்த கப்பல் 02 முதல் 05 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்படுகிறது.

சுமார் 1,600 பேர் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் குறைந்தபட்சம் ரூ.1.06 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.37 இலட்சம் வரை பயணக் கட்டணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...