நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தையான அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்ததினம்

- ரஷ்ய மொழிதினம் இன்று அனுஷ்டிப்பு

ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்ததினம் ஜூன் 06, 1799 ஆகும். இந்நாளே 'ரஷ்ய மொழி தினம்' என ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 06 ஆம் திகதி கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் கொண்டாடப்படுகிறது. ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியருக்கு ஒப்பானவராக கருதப்படுவரே ரஷ்ய இலக்கிய சிருஷ்டி அலெக்சாண்டர் புஷ்கின்.

ரஷ்யக் கவிஞரும், காதல் கவிதைகள் யுகத்தின் சிறந்த படைப்பாளியுமான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் 1799 இல் பிறந்தவர். இளம் வயதிலேயே தனது நகர நூலகத்தில் பல புத்தகங்களைப் படித்தார். இந்தச் சூழல் அவருக்கு இலக்கிய தாகத்தை ஊற்றெடுக்க வைத்தது.

அவர் செயின்ட் பீட்டர்ஸ்பேர்கில் உள்ள பாடசாலையில் பயின்றார். படிக்கும்போதே 15 வயதில் தனது முதல் கவிதையை எழுதி வெளியிட்டார். அதன் பின்னர் விரைவிலேயே இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றார்.

அலெக்சாண்டர் புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் நவீன ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. ரஷ்ய இசையமைப்பாளர்களுக்கு இவரது கவிதைகள் உந்துசக்தியாக அமைந்தன. இவரது தி ஸ்டோன் கெஸ்ட், மொஸார்ட் அண்ட் ஸலியெரி ஆகிய நாடகங்கள் புகழ்பெற்றவை. புஷ்கின் எழுதிய நாவலான ‘யூஜின் ஆனிஜின்’, ரஷ்ய வாழ்க்கையின் கலைக்களஞ்சியம் எனப்படுகிறது.

‘போரிஸ் குட்னவ்’ என்ற தனது மிகவும் பிரபலமான நாடகத்தை எழுதினார். 1820 இ-ல் ரஸ்லன் அண்ட் லுட்மிலா என்ற தனது முதல் நீண்ட கவிதையை வெளியிட்டார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், உரைநடை கவிதை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனக் கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். சமூக சீர்திருத்தங்களில் இவரது கவனம் என்றும் இருந்தது. தீவிர இலக்கியவாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஜார்அரசின் கோபத்துக்கு ஆளானதால், தலைநகரைவிட்டு வெளியேறினார். காகசஸ், கிரிமியா ஆகிய இடங்களுக்குச் சென்றார். 1823- இல் பல காதல் காவியங்களைப் படைத்தார். இவரது படைப்புகள் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது 'நீல வானத்தின் கீழ்' எனும் கவிதை உலகப் பிரசித்தி பெற்றதாகும். சர்வதேச இலக்கிய வரலாற்றில் அலெக்சாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் நிச்சயமாக மிகவும் பிரபலமான, மிகவும் போற்றப்பட்ட ரஷ்ய கவிஞரும், இலக்கிய சிருஷ்டியும் ஆவார். அத்துடன் அவர் ஒரு நாவலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(7 ஆம் பக்கம் பார்க்க)

 

- ஐங்கரன் விக்கினேஸ்வரா


Add new comment

Or log in with...