ஜித்தாவில் இடம்பெற்ற 48ஆவது IsDB வருடாந்த சந்திப்பில் அமானா வங்கி

IsDB வருடாந்த சந்திப்பில், அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் மற்றும் தவிசாளர் அஸ்கி அக்பரலி ஆகியோருடன், IsDB குழுமத்தின் இடைக்கால பணிப்பாளர் நாயகம் அமிர் புக்விச் காணப்படுகின்றார்.

சவூதி அரேபியாவின், ஜித்தாவில் அண்மையில் இடம்பெற்ற 48ஆவது IsDB வருடாந்த சந்திப்பில் அமானா வங்கி பங்கேற்றிருந்தது. இந்த நிகழ்வில் OIC அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர்கள் மற்றும் IsDB முதலீடுகள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வு, 57 OIC அங்கத்துவ நாடுகளின் பிரசன்னத்துக்கு மேலதிகமாக, உலகளாவிய ரீதியில் 90 நாடுகளின் 4000 க்கும் அதிகமானவர்களை கவர்ந்திருந்தது. உலக வங்கி, IMF, UNDP மற்றும் ADB போன்ற 89 முன்னணி பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர் நிறுவனங்களும் இணைந்து கொண்டன. அமானா வங்கியின் சார்பாக அதன் தவிசாளர் அஸ்கி அக்பரலி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பங்குபற்றுநர்களுடனான அமர்வுகளில் உயர் மட்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

அங்கத்துவ நாடுகளில் நிலவும் அபிவிருத்தி சவால்கள் மற்றும் நிறுவனசார் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறும் அமர்வாக IsDB குழுமத்தின் வருடாந்த சந்திப்புகள் அமைந்துள்ளன. இந்த ஆண்டில் IsDB குழுமம் வெற்றிகரமான முறையில் உலக வங்கி, IMF, UNDP மற்றும் ADB போன்ற அரச, சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்கள், தனியார் துறை, கல்விசார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் போன்றவற்றின் உயர் மட்ட பேச்சாளர்களை ஈடுபடுத்தி தொடர் அறிவுப் பகிர்வு அமர்வுகளையும் முன்னணி நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தது. ‘Partnerships to Fend off Crises’ எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கைகோர்ப்புகள், புத்தாக்கம் மற்றும் தந்திரோபாய இணைவுகள் போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தன.

அறிவுப் பகிர்வு அமர்வின் போது, கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியான சூழல்களால் பாதிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDG) எய்துவதற்கு உறுதியான பங்காண்மைகள் மற்றும் அதிகரித்த முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பொது-தனியார் பங்காண்மை முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் மாற்று நிதியளிப்பு பொறிமுறைகளை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச சமூகங்களின் முயற்சிகளை புதுப்பிக்குமாறு பேச்சாளர்கள் கோரியிருந்தனர். இந்த அமர்வில் உயர் மட்ட முழுமையான அமர்வுகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் மற்றும் வறுமை ஒழிப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பெண்கள் மற்றும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் காலநிலை செயற்பாடு போன்ற பரந்தளவு தலைப்புகளில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளும் உள்ளடங்கியிருந்தன.

IsDB வருடாந்த சந்திப்பு தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன், IsDB வருடாந்த சந்திப்பில் நாமும் இணைந்து கொண்டதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் தலைப்புகள் தொடர்பில் இங்கு பேசப்பட்டது. இந்த உயர்மட்ட நிகழ்வில் எமது பங்கேற்பானது, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் எமது நோக்கத்துடன் பொருந்தும் வகையில் அமைந்திருந்தது.” என்றார்.

இந்த அமர்வில் அமானா வங்கியின் பங்கேற்பு தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை ஒரு OIC அங்கத்துவ நாடாக திகழாத போதிலும், IsDB வருடாந்த சந்திப்பு 2023 இல் நாம் பங்கேற்றிருந்ததையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். IsDB வருடாந்த சந்திப்பின் போது, சுகாதாரப் பராமரிப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை, கல்வி மற்றும் மனிதநேய உதவி போன்ற பிரிவுகளை உள்வாங்கி 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான 77 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தமையை நாம் அவதானித்திருந்தோம். எதிர்காலத்தில் இவ்வாறான அபிவிருத்தி உடன்படிக்கைகளினூடாக இலங்கையும் அனுகூலம் பெறும் என நான் எதிர்பார்க்கின்றேன். இது OIC அங்கத்துவ நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை, OIC கண்காணிப்பாளர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்ட ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.


Add new comment

Or log in with...