முதல் நாள் படப்பிடிப்பில் மகனை உற்சாகப்படுத்திய ஷாருக் கான்!

பெரும்பாலான நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை நடிகராக அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் கரண் ஜோகார் முன் வந்திருந்தார் ஆனால் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று ஆர்யன் கான் தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் இயக்குநராக ஆர்யன் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கான வேலையில் கடந்த சில மாதங்களாக ஆர்யன் கான் ஈடுபட்டு வந்தார். ரெட் சில்லீஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் கதைக்குழு ஆர்யன் கானுடன் சேர்ந்து கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

முதல் கட்டமாக வெப்சீரிஸ் ஒன்றை இயக்க ஆர்யன் கான் முடிவு செய்துள்ளார். அதன் முதல் நாள் படப்பிடிப்பு மும்பை ஒர்லியில்  கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கியது.

வழக்கமாக எந்த நிகழ்ச்சிக்கும் மிகவும் தாமதமாகவே வரும் ஷாருக் கான் தனது மகன் இயக்குனராக அறிமுகமாகிறார் என்றவுடன் காலை 7 மணிக்கே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார். `ஸ்டார் டம்' என்ற பெயரில் 6 எபிசோட்களாக இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட  உள்ளது.

இதனை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த வெப்சீரிஸில் கெளதமி கபூர், ஷாருக் கான், ரன்வீர் சிங் ஆகியோர் வேவ்வெறு எபிசோட்களில் நடிக்க இருக்கின்றனர். இந்த எபிசோட்களில் ரன்வீர் சிங், ஷாருக் கான் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதையை முன்னெடுத்து செல்ல இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர்களை ஆர்யன் கான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக் கானை ஆர்யன் கான் இயக்கவிருக்கிறார் என்று கடந்த மாதம் செய்திகள் வெளியானது. தற்போது அதற்கான படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே பெரும்பாலான நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கும் நிலையில் ஆர்யன் கான் மட்டும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். 


Add new comment

Or log in with...