குறுகிய காலத்தில் அதிக பணம்!

- போலி வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றும் பிரமிட் திட்டங்கள்

ஒரு முறை உறவுக்கார சகோதரியொருவரை சந்தித்தேன். தான் புதிதாக வியாபாரமொன்றை தொடங்கியிர்ப்பதாகவும், குறுகிய காலத்தில் அதிக இலாபத்தை பெறும் இலகுவான வியாபார முறை என்றும் எந்தவித அலைச்சலும் இல்லாமல் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார். முதலில் எலக்ட்ரிக் பொருட்களில் ஒன்றை வாங்கி இத்திட்டத்தில் இணையலாம் என்றும் என்னிடம் கூறினார். அதன்பின்னர் மேலும் இருவரை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்கு கமிஷன் தரப்படும். அந்த இருவர் மேலும் இருவரை இணைந்தாலும் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். விரும்பினால் இன்றே பொருளை வாங்கி இத்திட்டத்தில் இணையலாம் என்றும் கூறினார்.

எனினும் அது தடைசெய்யப்பட்ட பிரமிட் மோசடி திட்டம் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. பெரிதாக வியாபாரத்தில் ஈடுபாடு இல்லையென்பதால் அவரது கோரிக்ைகக்கு மறுப்புச் சொல்லி விட்டேன். சிறிதுகாலத்தின் பின்னர் மீண்டும் அவரை சந்தித்த போது, உங்கள் வியாபாரம் எப்படிப் போகின்றது எனக் கேட்டேன். அப்போது தான் முதலாளி எல்லா பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஒடிவிட்டார். அவரிடம் வாங்கிய பொருளும் சரியில்லை. என்னோடு இணைந்த இருவரும் எந்த நேரமும் என்னிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்கின்றனர். என்னால் ஊரில் தலை காட்டமுடியவில்லையென அழுது புலம்பினார்.

இவ்வாறான மோசடிகள் வெவ்வேறு வடிவங்களில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக உங்கள் வீட்டு வாசலைத் தேடியும் வந்திருக்கலாம். ஒருவேளை இத்தகைய மோசடித் திட்டங்களில் சிக்கி பணத்தை இழந்த கசப்பான அனுபவங்கள் உங்களில் பலருக்கும் இருக்கலாம்.

பிரமிட் திட்டம் என்பது ஒரு மோசடி முதலீட்டு உத்தி எனலாம். இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்டத்துக்கு முரணானவை. 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ)இன் பிரகாரம் பிரமிட் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு நபர் நேரடியாகவோ அல்லது மறைமுறைகமாகவோ இவ்வாறான மோசடிகளுக்கு ஒத்துழைத்தல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நடத்துதல், நிதியிடல், முகாமைத்துவப்படுத்தல், இயக்குதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். பிரமிட் திட்டத்துடன் தொடர்பிருப்பதாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால், குற்றவாளி 03 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார் அல்லது 01 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும். அல்லது இரண்டு தண்டனைகளையும் அனுபவிக்க நேரிடலாம்.

அதற்கமையவே கடந்த வாரம் சட்டவிரோத பிரமிட் மோசடி திட்டத்தில் ஈடுபட்ட 08 நிறுவனங்கள் மத்திய வங்கியினால் தடைசெய்யப்பட்டுள்ளன.

பிரமிட் கட்டமைப்பில் இணைகின்ற ஒருவர் சந்தையில் கேள்வி, பெறுமதி குறைந்த ஒருபொருளை அல்லது சேவையை, அதிக பணத்தை முதலீடு செய்து வாங்கவேண்டும். பின்னர் அதில் மற்றவர்களை இணைப்பதன் மூலம் ஒரு பங்கு வருமானத்தை பெறலாம், இதில் புதிதாக இணையும் நபரும் முதலீட்டை மேற்கொண்டு அவருக்கு கீழ் மேலும் சிலரை இணைப்பார். இதற்கு அவருக்கும் அவரை இணைத்தவருக்கும் வருமானத்தின் ஒருபங்கு கிடைக்கும். முதல் நபர் இருவரை சேர்க்க அவர்கள் தலா நால்வரை சேர்க்க, காலப்போக்கில் இது பிரமிட் போன்று வளர்ந்து செல்லும். எனினும் ஒரு கட்டத்தில் இது சரிவை சந்திக்கும் போது மேல் நிலையிலுள்ளவர்கள் இலாபமடைய புதிதாக இணைந்தவர்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களினால் மோசடிக்காரர்கள் மக்களை இதில் சிக்கவைக்கின்றனர். இதற்காக காலத்துக்கு காலம் பல்வேறு புதிய உத்திகளை கையாளுகின்றனர். தனியார் வகுப்பு ஆசிரியர்கள், சமூகத்தில் அதிக செல்வாக்குடையவர்கள் போன்றவர்களூடாக இத்திட்டத்துக்கான ஆட்கள் சேர்க்கும் முயற்சிகளை மோசடிக்காரர்கள் மேற்கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உதாரணமாக வடக்கில் பல்கலைக்கழக மாணவர்கள், அரச அதிகாரிகள் கூட இதில் விளம்பரக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஆரம்பத்தில் இணைந்தவர்களுக்கு அதிகளவான கமிஷன், சலுகைகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.

பொதுவாக இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நிலை உறுதிப்பாடு, நிதியியல் உறுதிப்பாடு என்ற இரு பிரதான நோக்கங்களை அடைவதற்காக 30க்கும் மேற்பட்ட செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. அதில் நிதியியல் நிறுவனங்களை மேற்பார்வை செய்தலும் ஒரு பிரதான செயற்பாடாகும். அதற்கமையவே மத்திய வங்கியின் கொள்கைகள் சட்டதிட்டங்களுக்கமைவாக குறிப்பிட்ட வங்கிகள், குத்தகை நிறுவனங்களுக்கு வைப்புகளை பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய வங்கியில் பதிவு செய்தே எந்தவொரு நிதியியல் நிறுவனமும் வைப்புகள், முதலீடுகளை பெறவேண்டும். மத்திய வங்கி அவற்றை காலத்துக்கு காலம் மேற்பார்வை செய்யும். எனினும் பிரமிட் நிதியியல் கம்பனிகள் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்படுவதில்லை. அவற்றுக்கு எந்தவித ஒழுங்கு விதிகளும் கிடையாது.

இந்நிறுவனங்கள் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் ஊடாகவே மக்களை ஏமாற்றி வைப்புகளை, முதலீடுகளை பெறுகின்றன.

பொதுமக்களும் இச்சான்றிதழை கண்டவுடன் இது அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்றெண்ணியே முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.

இத்திட்டத்தில் பெரும்பாலும் பணக்காரர்கள் அகப்படுவதில்லை. அப்பாவி வறிய, சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். போதிய வருமானமின்மை, வருமானத்தில் ஏற்படுகின்ற சிக்கல் அவர்களை எப்படியாவது ஏதாவது ஒருவகையில் வருமானத்தை ஈட்டிவிட வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டுச் செல்கின்றது. இதனுடைய ஒரு விளைவே பிரமிட் மோசடிக்காரர்களின் வலையில் அவர்கள் சிக்கிக் கொள்வது.

சிலர் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையே இத்திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் அதை இழக்கின்றனர். இன்னும் சிலர் நண்பர்களிடம் கடன் பெற்று பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர். இதைவிட கொடுமை என்னவென்றால் அரச, தனியார் நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்கள் கூட சில சமயங்களில் தமது நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் கடன் உதவிகளை (LOAN) பெற்று அதை பிரமிட் திட்டத்தில் முதலீடு செய்து இறுதியில் அதை மீள பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் சம்பளத்தில் கடனை மட்டும் செலுத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர்.

குடும்ப செலவுகளை கூட ஒழுங்காக பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது. சில சமயங்களில் தொழிலையும், உறவுகளையும், நண்பர்ளையும் இழக்கின்றனர். தற்கொலை, குடும்ப பிணக்குகள், கொலை போன்ற சமூகவிரோத செயல்களுக்கும் இது காரணமாக அமைகின்றது.

அதுமட்டுமின்றி பிரமிட் மோசடித் திட்டம் என்பது தனி ஒரு மனிதனை மாத்திரம் பாதிப்பதில்லை. இது ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் நிதியியல் முறைமையே பாதிக்கும். அதனால் தான் இதனை நிதியியல் சுனாமி எனவும் அழைக்கின்றனர். சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், நிதிக் கட்டமைப்புக்குள் புகுந்து ஒருநாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையையும் தோல்வியடைய செய்கின்றது. இத்திட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்படுமாயின் இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை விட பலமடங்கு ஆபத்தானதென இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கின்றது. இதற்கு உதாரணமாக அல்பேனியா நாட்டை குறிப்பிடலாம். பிரமிட் திட்டங்களால் மிகவும் மோசமான விளைவுகளை அந்நாடு சந்தித்திருந்தது. மொத்த தேசிய உற்பத்தியில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணத்தை பிரமிட் திட்டத்தில் மக்கள் முதலீடு செய்திருந்தனர். அதனால் 2/3 சனத்தொகையினர் அதில் பங்காளர்களாகவிருந்தனர். ஒருகட்டத்தில் அத்திட்டம் தோல்வியில் முடிந்தமையால் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளுக்கும் அது வழிவகுத்தது. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டது. அதேபோல் ரஷ்யாவும் ஒருகாலத்தில் பிரமிட் மோசடித் திட்டங்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் பெரும்பாலான நாடுகள் பிரிமிட் திட்டத்தை தடைசெய்துள்ளன.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பலர் யுத்தத்தின் பின்னர் பிரமிட் நிதியியல் கம்பனிகளிடம் சிக்கி தமது பணத்தை இழந்திருந்தனர்.

இலங்கை மத்திய வங்கி குற்றப்புலனாய்வு திணைக்களத்துடன் இணைந்து இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் சட்டநடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , சட்ட மாஅதிபர் திணைக்களம், சட்ட அமுலாக்கல் பிரிவு, பொலிஸ் என்பவற்றுடன் இணைந்து இத்தகைய மோசடி திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளை வெளியில் சொல்ல முன்வராமை, முறைப்பாடுகளை பதிவு செய்வதில் காட்டும் தயக்கம், சட்டச் சிக்கல்கள், அரசியல் தலையீடுகள் போன்றவை பிரமிட் மோசடிக் கம்பனிகளை கட்டுப்படுத்துவதற்கு தடையாகவுள்ளன.

எனவே ஒரு வியாபாரத் திட்டம் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்பதற்கு மாறாக மற்றவர்களை இணைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்குமாயின் அதை சந்தேகத்தோடு மக்கள் அணுகவேண்டும்.

அவர்கள் தரும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தரம் குறித்து விசாரியுங்கள். மிகக் குறுகிய காலத்துக்குள் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியை ஒருவர் வழங்கினால், அத்தகைய திட்டங்கள் ஆபத்தானவை என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

எல்லாவற்றையும் விட இவ்வகையான திட்டங்கள் எத்தகைய வருமானம் தந்தாலும் அவற்றிலிருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது.

அதேபோல் கிரிப்டோகரன்சியும் (Cypto currency) பிரமிட் திட்டத்தை ஒத்த ஒன்றாகவே அண்மைக்காலமாக பிரபல்யமடைந்து வருகிறது.

கிரிப்டோகரண்சி என்பது ஒரு டிஜிட்டல் கட்டண முறையாகும். இது ஒரு வகையான மெய்நிகர் நாணயமாகும். இது ஒரு நாட்டின் பண அதிகாரத்தால் உருவாக்கப்படுவதில்லை.

தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. ‘கிரிப்டோ கரண்சி’ என்பது குறியாக்கவியல் மற்றும் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் (DLT) அல்லது ஒத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் டிஜிட்டல் பிரதிநிதித்துவத்தைக் குறிக்கிறது.

எனினும் இலங்கையில் இத்திட்டத்தினால் பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

கிரிப்டோகரண்சிகள் இலங்கையில் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை மற்றும் நாட்டில் அவற்றின் பயன்பாடு தொடர்பான ஒழுங்குமுறை பாதுகாப்புகள் எவையும் இல்லை. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழும் 2021ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்கச் சட்டத்தின் படியும் கிரிப்டோகரண்சி பரிவர்த்தனைக்கான பணம் செலுத்துவதற்கு கடன் மற்றும் வைப்பு அட்டைகள் போன்ற மின்னணு நிதி பரிமாற்ற அட்டைகள் (EFTCகள்) பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. Crypto currency க்கான பணம் செலுத்தல்கள் முறைசாரா சேனல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது,

கிரிப்டோ -முதலீடுகளின் அடிப்படையில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதியுடன் செயற்படும் நிதி மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கிரிப்டோகரண்சியில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாமென உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதும், மோசடியான கிரிப்டோகரண்சி திட்டங்களில் முதலீடு செய்ய தனிநபர்களை ஏமாற்றுவதும் இந்த மோசடிகளில் அடங்கும். இதன் விளைவாக தனிநபர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடுகிறது.

- வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...