கடன் உச்ச வரம்பை அதிகரிக்க செனட் சபையில் ஆதரவு வாக்கு

அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க அந்நாட்டு செனட் சபையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இரு தரப்பு உடன்படிக்கை எட்டப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் கையொப்பத்திற்கு செல்வதற்கான கடைசி தடையையும் இந்த சட்டமூலம் தாண்டியுள்ளது.

வரும் ஜூன் 5 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்கா கடனை திருப்பிச் செலுத்தாத நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த சட்டமூலத்தில் கைச்சாத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைடனின் ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினருக்கு இடையே இழுபறியை தீர்ப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த சட்டமூலம் செனட் சபையில் 63–36 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது பிரதிநிதிகள் அவையில் கடந்த புதனன்று (31) நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டினதும் நாட்டின் பொருளாதாரத்தினதும் மிகப்பெரிய வெற்றி என்று பைடன் இதனை வரவேற்றுள்ளார். இந்த சட்டமூலத்திற்கு விரைவில் கையொப்பம் இடப்போவதாக கடந்த வியாழக்கிழமை (01) குறிப்பிட்டார்.

தற்போது அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு 31.4 பில்லியன் டொலர்களாக உள்ளது. அதை உயர்த்தித் திருத்துவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கும்.

இந்த சட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரை அமெரிக்க அரசாங்க கடன் உச்சவரம்பை நீக்குகிறது.

இந்தப் பிரச்சினை இனி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்தான் மீண்டும் தலைதூக்கும்.

அத்துடன், இது அடுத்த இரண்டாண்டுகளுக்கு அரசாங்க செலவினத்தைக் குறைத்து, சில தேவையான எரிசக்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளித்து, கொவிட் தொற்றுக்கான நிதி ஓதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத நிதியை திரும்பப்பெற அனுமதி அளித்து, உணவு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற எண்ணுவோர் தங்கள் வேலை தொடர்பாக சில தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற இரு கட்சி இணக்கத்தின் பேரில் இந்தச் சட்டம் வரையப்பட்டுள்ளது.

கடன் உச்சவரம்பை உயர்த்தும் சட்டமூலம் சட்டமானால் நிதி நெருக்கடியில் உள்ள அமெரிக்க அரசின் சுமைகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் அடிப்படை திட்டங்களை அரசு விரிவுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...