சீனாவில் புதிய கொவிட் அலை பரவும் அபாயம்

சீனாவில் புதிதாகப் பரவிவரும் கொவிட் பெருந்தொற்று இம்மாத இறுதிக்குள் பாரிய அலையாக உருவெடுக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சீனாவின் முன்னணி தொற்று நோயியல் நிபுணர் சொங் நன்சான், இதன் விளைவாக இம்மாத இறுதியாகும் போது வாரத்திற்கு 65 மில்லியன் மக்கள் இத்தொற்றுக்கு உள்ளாக முடியுமென மதிப்பிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பெருந்தொற்றுக்கு மக்கள் உள்ளாகின்ற போதிலும் அதன் விளைவான தீவிர சிக்கல்கள் குறைவாகக் காணப்படுவதோடு சிகிச்சை பெறவென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக பீஜிங் வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட்–19 பெருந்தொற்று கட்டுப்பாட்டின் பொருட்டு கடந்த மூன்றாண்டுகளாக முன்னெடுத்த கொவிட் பூச்சியக் கொள்கையை சீனா அண்மையில் தளர்த்தியது. அதனைத் தொடர்ந்து குறைவான காலத்திற்குள் மீண்டுமொரு புதிய அலைக்கு முகம் கொடுக்கும் அச்சுறுத்தலை சீனா எதிர்கொண்டுள்ளது. இதன் விளைவாக சீனாவின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை புள்ளிவிபரங்களுக்கான தேசிய பணியகத் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் தொற்று நோயியல் நிபுணர் நன்சான், அமெரிக்கா பொருளாதார மந்தநிலை அபாயத்தை எதிர்கொள்வதால், சீனப் பொருட்களுக்கான வெளிப்புற தேவை பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக இல்லை என்றும் மார்ச் மாதம் 14.8 வீதமாகக் காணப்பட்ட சீனாவின் ஏற்றுமதி ஏப்ரலில் 8.5 வீதமாகவே இருந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...