ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 269 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் சத்ரான் மற்றும் ரஹமத் ஷா ஆபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கான் அணியின் இலகு வெற்றிக்கு உதவினர்.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணிக்கு ஆரம்பமே தடுமாற்றத்தை தந்தது. இரண்டு ஆண்டுகளின் பின் ஒருநாள் அணிக்கு திரும்பிய டெஸ்ட அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 6 பந்துகளில் 4 ஓட்டங்களை பெற்ற நிலையில் பசால்ஹக் பாரூக்கியின் பந்துக்கு வெளியேறினார்.
தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸும் பாரூக்கியின் பந்துக்கு 11 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேற இலங்கை அணி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இலங்கை அணியின் மற்றொரு அனுபவ வீரரான அஞ்சலோ மத்தியூஸினால் 12 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஒரு பெளண்டரிகூட பெறமால் 32 பந்துகளில் அந்த ஓட்டங்களை பெற்ற மத்தியூஸ் பரீட் அஹமட்டின் பந்துக்கு சிக்கினார்.
இந்நிலையில் மறுமுனையில் ஸ்திரமாக ஆடிக்கொண்டிருந்த ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க 59 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 38 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழக்க இலங்கை அணி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் 5ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா 99 ஓட்டங்களை இணைப்பட்டமாக பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக ஆடிவந்த தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது 9ஆவது அரைச் சதத்தை பெற்ற நிலையில் வேகமாக ஆட முயன்று ஆட்டமிழந்தார்.
59 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பெளண்டரிகளுடன் 51 ஓட்டங்களை பெற்றார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அசலங்க இலங்கை அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். அணித் தலைவர் தசுன் ஷானக்கவுடன் சேர்ந்து அவர் மேலும் 32 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார்.
எனினும் ஷானக்க 16 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் நூர் அஹமதின் குக்லி பந்தில் சிக்கி போல்டானார்.
தொடர்ந்து தனது கன்னி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய துஷான் ஹேமன்த இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரிக்க உதவினார். அசலங்கவுடன் சேர்ந்த ஹேமன்த ஏழாவது விக்கெட்டுக்கு 48 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.
20 பந்துகளுக்கு முகம்கொடுத்த ஹேமன்த இலங்கை இன்னிங்ஸில் பெற்ற ஒரே சிக்ஸை விளாசியதோடு 22 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார். ஹேமன்த ஆட்டமிழக்கும்போது 91 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை நெருங்கி இருந்த அசலங்க கடைசி ஒவரில் விக்கெட் காப்பாளரிடம் சென்ற பந்துக்கு துடுப்பெடுத்தாடும் பக்கம் ஓடியபோதும் ரன் அவுட் ஆனார்.
கடந்த திங்கட்கிழமையே திருமணம் பந்தத்தில் இணைந்த அசலங்க, 95 பந்துகளுக்கு முகம்கொடுத்து 12 பெளண்டரிகளுடன் 91 ஓட்டங்களை பெற்றார். இது ஒருநாள் போட்டிகளில் அசலங்க பெற்ற ஏழாவது அரைச்சதமாகும்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி கடைசி இரண்டு ஓவர்களில் கடைசி நான்கு விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் அணிக்காக பந்துவீசிய ஆறு வீரர்களும் குறைந்தது ஒரு விக்கெட்டையேனும் வீழ்த்தியதோடு பரூக்கி மற்றும் பரீட் அஹமட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ஆப்கான் அணி 25 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சத்ரான் மற்றும் ரஹமத் ஷா 146 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்போது அதிரடியாக ஆடிய சத்ரான் 98 பந்துகளில் 11 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 98 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார்.
தொடர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த ரஹமத் ஷா 80 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் ஆப்கான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (04) நடைபெறவுள்ளது.
Add new comment