இலங்கையில் பௌத்தம் முதன்முதலில் அறிமுகமாகிய பொசன் போயா தினம்

நாட்டில் சீரிய கலாசாரத்தைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படையாக அமைந்த மஹிந்த தேரரின் வருகை

இலங்கை வரலாற்றில் பொசன் போயா தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இன்றைய நாளில்தான் பெளத்தம் இலங்கைக்கு முதல் தடவையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கி.மு. 328 ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வர் (துறவறம் பூண்ட இளவரசர்) மஹிந்த தேரர் இலங்கைக்கு வந்து மிஹிந்தலை மலை உச்சியில் இலங்கையில் அரசாட்சி புரிந்து வந்த தேவநம்பியதீசன் மன்னனை சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது.

கலிங்கப் போரில் தன்னை எதிர்த்துப் போராடிய எதிர்நாட்டு படைகளை போர்முனையில் படுதோல்வியடையச் செய்த அசோக மன்னன் அன்றிரவு போர்க்களத்திற்கு சென்று எதிரிகள் அடைந்த இழப்புக்களை கண்காணித்துக் கொண்டிருந்த போது, ஒரு வயோதிப் பெண் ஒரு இளம் போர்வீரரின் சடலத்தை தனது மடியில் வைத்து கண்ணீர்விட்டு அழுதுக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போன அசோக சக்கரவர்த்தி, குனிந்து அந்தப் பெண்ணிடம், “ஏன் அம்மா அழுகிறீர்கள்?” என்று கருணையுடன் கேட்டிருக்கிறார்.

“போர்முனையில் எங்கள் நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டுப் படையினர் எனது மகனை கொன்றுவிட்டார்கள்” என்று தெரிவித்த அந்த வயோதிப மாது நீங்கள் யார் என்று அசோகச் சக்கரவர்த்தியிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த சக்கரவர்த்தி “நான்தான் சாம்ராட் அசோகன்” என்று பதிலளித்தவுடன் வேங்கையைப் போன்று கொதித்தெழுந்த அந்த வயோதிப மாது, அழுது கொண்டே மயக்கமடைந்தார்.

இச்சம்பவத்தினால் மனம் நொந்துபோன அசோகச் சக்கரவர்த்தி செய்வதறியாது “இத்தனை உயிர்களைப் பலிகொண்டு கலிங்கப் போரில் நான் அடைந்த வெற்றியினால் எதனை சாதிக்கப் போகிறேன்?” என்று நிலை தடுமாறி வேதனையில் மூழ்கியிருந்த போது, அவருக்கு போதிமரத்து மாதவன் புத்தபெருமானின் நற்போதனைகளின் உண்மைத் தத்துவத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

அன்று முதல் அசோகச் சக்கரவர்த்தியின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. யுத்தம், போன்ற தீய எண்ணங்களை அடியோடு துறந்துவிட்ட அசோகச் சக்கரவர்த்தி, பெளத்த தம்மத்தைத் தழுவி பெளத்த தம்மத்தின் நற்போதனைகளை உலகெங்கும் பரப்பும் பணியை ஆரம்பித்தார்.

இந்த பெளத்த தம்மத்தை போதிக்கும் பணிக்கு தனது மகன் இளவரசர் மஹிந்தவையும், மகள் இளவரசி சங்கமித்தையையும் தேர்ந்தெடுத்தார். பின்னர் காவி உடையணிந்து பெளத்த தம்மத்தை உலகத்திற்கு பரப்பும் பணிக்காக துறவறம் பூண்ட அரஹட் மஹிந்த இலங்கைக்கு வந்து மன்னன் தேவநம்பிய தீசனை சந்திக்கச் சென்ற போது, மன்னன் மிஹிந்தலை மலை உச்சியில் மான் வேட்டையாடிக் கொண்டிருப்பதை அவதானித்தார்.

தேவநம்பிய தீச மன்னனை அணுகிய இவர், பெளத்த தம்மத்தை அவரிடம் போதித்து, கருணாமூர்த்தி புத்த பெருமானின் போதனைக்கு அமைய கருணையுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று போதனை செய்தார். இவர்களின் இந்த பெளத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீச மன்னன், மிருகங்களை வேட்டையாடுவதை அடியோடு கைவிட்டு பெளத்த தம்மத்தை தனது பல்லாயிரக்கணக்கான மக்கள் சகிதம் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே இலங்கையில் பெளத்தம் தழைத்தோங்குவதற்கான ஆரம்பமாகும். அசோகச் சக்கரவர்த்தி இலங்கைக்கு போதனை செய்த பெளத்த தம்மம் சீனா, ஜப்பான், தூரகிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கும் பரவிய போதும், இலங்கையில்தான் பெளத்த தம்மம் வலுவாக நிலைகொண்டது. இதனையடுத்து இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் அனைவரும் பெளத்த விகாரைகளையும், பெளத்த தூபிகளையும் நாடெங்கிலும் நிர்மாணித்தனர்.

மிஹிந்தலை மலையில் முதன்முதலில் தேவநம்பியதீச அரசனை சந்தித்த மஹிந்த தேரர், பெளத்த தம்மத்தின் தத்துவத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா என்பதற்கும் அவரின் அறிவின் தரத்தை அறிந்து கொள்வதற்கும் பல கேள்விகளை எழுப்பினார்.

“நாம் உண்மைத் தத்துவத்தை உலகத்திற்கு உபதேசித்த ஒரு பெரியாரின் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கிறோம்” என்று கூறி பெளத்த தம்மத்தை போதித்த போது, அதனை தேவநம்பியதீச மன்னன் ஏற்றுக் கொண்டு அன்றிலிருந்து பெளத்த தம்மத்துக்கு அமைய தன்னுடைய மற்றும் நாட்டு மக்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தார்.

அந்தச் சம்பவத்தினால் பெளத்தத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் துறவறம் பூண்டு நாடெங்கிலும் பெளத்தத்தை பரப்பினர். இந்த நிகழ்வு இலங்கையில் கலாசார மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு வழிகோலியது.

இந்தச் சம்பவத்திற்கு சில காலத்திற்கு பின்னர் அசோகச் சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்தை தேரர் புத்த பெருமான் புனிதத்துவம் அடைந்த அரசமரத்தின் கிளையொன்றை கொண்டுவந்து அதனை அனுராதபுரத்தில் நாட்டினார். இந்தக் கிளை இன்று ஒரு பெரிய விருட்சமாக மாறி ஸ்ரீ மாபோதி என்ற பெளத்த புனிதத் தலங்களின் பிரதான நிலைக்கு வந்துள்ளது.

பெளத்த தம்மம் இலங்கைக்கு அறிமுகமாகிய பொசன் போயா தினம் புதியதோர் கலாசாரத்தை யும் அமைதியான வாழ்க்கையை யும்அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.


Add new comment

Or log in with...