- பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % பலத்தை பெற முடியாது
- பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதே மக்களின் தேவை
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற "2023/ 2024 தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதால் நெருக்கடியிலிருந்து இலங்கை முற்றாக மீண்டுவிட்டது என்று கருத முடியாதென வலியுறுத்திய ஜனாதிபதி இந்தச் செயன்முறையின் வெற்றிக்கு எதிர்காலத்தில் பாரிய அர்பணிப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக இலங்கை முன்னொருபோதும் காணாத பொருளாதார நெருக்கடியை கண்டதென தெரிவித்த ஜனாதிபதி, அந்த நெருக்கடியிலிருந்த மீண்டு வருவதற்கான முயற்சிகளை தாம் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்திருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி ஆராயப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கோப்பி நடுகை மற்றும் பெருந்தோட்ட பொருளாதாரத்தை ஆரம்பித்து வைத்தவர் ஆளுநர் எட்வட் பான்ஸ் என்ற வகையில் நுவரெலியா எட்வட் பான்ஸ் மண்டபத்தை இந்த நிகழ்விற்காக தெரிவு செய்துள்ளமை சிறப்புக்குரியதாகும். நுவரெலிய அபிவிருத்தி, பெருந்தோட்ட பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் செலுத்தும். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதுள்ள ரம்மியமான நுவரெலியா நகரம் நமக்கு கிடைத்திருக்காது.
கடந்த 10 – 11 மாதங்களுக்கு முன்பாக வலுவிழந்த நாடாக மாறிவிடும் நிலைமையை கடந்து வந்துள்ளோம். எவ்வாறாயினும் தற்போது சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மையும் உருவாகியுள்ளது. இந்த நிலைத்தன்மை குறுகிய காலத்திற்குரியது என்பதால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உணர வேண்டும்.
முதலில் நமக்கு தற்போது கிட்டியுள்ள வெற்றி தற்காலிகமானது என்ற உண்மையை நாம் உணர வேண்டியது அவசியமாகும். அதனால் நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு முன் காணாத வகையிலான சவாலை இந்நாட்டின் பொருளாதாரம் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கண்டிருந்தது. கலவரங்களையும் யுத்தங்களையும் நாடு கண்டிருந்தாலும் அண்மையில் முகம்கொடுக்க நேரிட்ட பொருளாதார நெருக்கடி நாட்டின் அனைத்துச் செயற்பாடுகள் மீதும் தாக்கம் செலுத்தியிருந்தது.
இருப்பினும் சட்டம் ஒழுங்கு , அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் அர்பணிப்புடன் முன்னெடுத்திருந்தாலும் பாராளுமன்றம், நீதிமன்றம், ஊடகம், தனியார் துறை,தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், நமது நாட்டின் பொதுமக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்பு மீது நாட்டு மக்கள் நம்பிக்கை முற்றாக இழந்துள்ளனர்.
தனியொரு எம்.பியை மட்டும் கொண்டுள்ள ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பல்வேறு எண்ணங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளமையும் இதற்கு முன்னர் காணாத நிகழ்வாகும். அதேபோல் நிலையான அரசியல் வியூகங்களை கொண்ட அரசியல் கட்சிகள் இல்லாமையும் பெரும் பாதகமான நிலையை தோற்றுவித்துள்ளது.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும், பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுமையாக அரசியல் மயமாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் மேற்படித் எண்ணிக்கை 70% சதவீதமாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் 10% சதவீதமானோர் மாத்திரமே எஞ்சியிருப்பர்.
நீதியை நிலைநாட்டுவதற்கான பெருமளவான வழக்குகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய சவாலை நீதித்துறை இன்றளவில் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் ஊடகங்களும் அதன் செயற்திறனை சோதித்துப் பார்க்க முனைவதால் நம்பகத்தன்மை குன்றியுள்ளது.
அரசியல், நீதிமன்றம் மற்றும் ஊடக நிறுனங்களுக்கு இணையத்தளங்களினால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாம் மற்றைய நாடுகளிடமிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இன்று தொலைப்பேசியை கொண்டு தாம் இருக்கும் இடத்திலிருந்து வேண்டிய இலக்குகளை சென்றடையக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. அதனால் பாரம்பரிய முறைமைகள் குறிப்பிடத்தக்க அளவில் சவால்களுக்கு உள்ளாகியுள்ளன.
கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவும் அதே பாதையில் நாம் தொடர்ந்தும் பயணிக்க முடியாத காரணத்தினாலும் அரசாங்கம் போதிய வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் உள்ளது.
யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில், நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியை ஈட்டுவதற்காகவும் எமது பொருளாதாரத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான முனைப்புக்களை மேற்கொள்ளாமையின் காரணமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை நாம் தவறவிட்டோம். இந்த வீழ்ச்சியானது சடுதியாக நிகழவில்லை. நீண்ட கால நிகழ்வுகளின் பலனே இதுவாகும்.
எமது நாட்டின் பண்டங்களை விற்பனை செய்து மற்றைய நாடுகளிடமிருந்து பணம் ஈட்டுவதற்கு மாறாக நாம் மற்றைய நாடுகளிடத்திலிருந்து அதிகளவில் பொருட்களை கொள்வனவு செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.
நான் தொழில் அமைச்சராக இருந்தபோது, வியட்நாமின் முதலீட்டாளர்கள் இல்லாமையின் காரணமாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் எமது உதவியை நாடி வந்தார். ஆனால் இப்போது முதலீட்டாளர்களை கொண்டு வர அவர்களிடமும் பங்களதேஷிடத்திலும் நாம் உதவி கோர வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நாம் சுற்றுலாத்துறை வலுவூட்டிய காலத்தில் எமது மேலதிக சுற்றுலாப் பயணிகளை மாலைத்தீவுகளுக்கு அனுப்பினோம். இன்று மாலைதீவு தமது மேலதிக சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பில் பார்கின்ற போது சடுதியான மாற்றங்களுடன் கூடிய பொருளாதார வேலைத்திட்டம் ஒன்று எமக்கு அவசியமாகிறது. அதனால் எமது பயணம் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதோடு, மக்களின் வாழ்க்கை சிறக்கும் என்ற நம்பிகையையும் ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.
அதனால் தற்போது அரசியல் உள்ளிட்ட மற்றைய பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அவசியமான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆனால் சிலர் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. எவ்வாறாயினும், நாம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள ஒரு நாடு என்பதையும், நாம் இதுவரை அடைந்துள்ள ஸ்திரத்தன்மை ஆரம்பம் மட்டுமே என்பதையும் மறந்துவிடக் கூடாது. நமது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடனை மறுசீரமைத்த பின்னர் நமது வேலைத்திடம் சாத்தியமாகிவிட்டதென கருதலாம்.
தொடர்தும் நாம் இந்த வழியில் பயணிக்க முடியாது. எனவே நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும். எமது பொருளாதாரத்தை நிலையான பாதையில் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, எமது தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் போட்டித்தன்மை மிக்கதான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேநேரம். பொருளாதார முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
உலகில் 1980- 2000 யுகங்களில் ஏற்பட்ட பொருளாதார புரட்சிகளை போல் அல்லாமல் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல் நிலைமைகளை நாம் காண்கிறோம். அவ்வாறான மோதல்களின் பாதிப்புக்களை எதிர்கொள்வதிலிருந்து விலகிக்கொள்ளும் வகையிலும் தற்கால நிலைமைகளை கருத்திற் கொண்டுமே நாம் எதிர்கால திட்டமிடல்களை வகுக்க வேண்டியுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டு மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, வறுமையில் வாடுபவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்குடன் நமது பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டியதும் அவசியமாகும்.
நாட்டில் பொருளாதார மாற்றங்களைக் ஏற்படுத்துவதற்காக காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் பிரவேசித்தல் அவசியம் என்பதோடு சந்தைப் பொருளாதார கட்டமைப்பொன்றும் எமக்கு அவசியப்படுகிறது.
நேற்றைய எனது உரையில், நமது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் நிதி நிதியியல் சீர்திருத்தங்கள், சந்தை இலகுபடுத்தல், சமூக பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு போன்ற நான்கு முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டியிருந்தேன்.
அரச நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய நமது தெரிவுகளில் குறைபாடுகள் உள்ளமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 2048 இல் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறுவதற்கு நாம் குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசுபிக் போன்ற மிகப்பெரிய உலகளாவிய சந்தைகளுக்குள் பிரவேசிப்பதற்கான பிராந்தியத்திய் விரிவான பொருளாதார கூட்டமைப்பான (RCEP) இல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளுக்கே நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்பின் உறுப்புரிமையை விரைவில் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளுக்கே நாம் முன்னுரிமை அளித்துள்ளோம். இக் கூட்டமைப்பில் மெக்ஸிகோ, கனடா, சிலி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன உள்ளடங்கும். இதனால் நமக்கு பல்வேறு வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் கிட்டும் என்பதோடு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் பலப்படுத்திக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் சர்வதேச சந்தை வாய்ப்புகள் நமக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளின் போது உலக வர்த்தக அமைப்பின் (WTO) நியதிகளுக்கு இணங்க வேண்டியதும் அவசியமாகும்.
உலகளாவிய சட்ட சமூகம் மற்றும் கடல்சார் பொருளாதாரத்துடன் நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் சர்வதேச வர்த்தக மையத்தை உருவாக்கியுள்ளோம். இதனால் தொழில்துறை மற்றும் தற்போது சர்வதேச வர்த்தக அமைச்சினால் மேற்படி மையத்தின் நிர்வாக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிற்காலத்தில் வெளிவிவகார அமைச்சு அதனை பொறுப்பேற்கவுள்ளது.
நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு இணையான மாற்றங்கள் சட்ட கட்டமைப்பிலும் ஏற்பட வேண்டும். அதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதற்காக சட்ட வல்லுனர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் முன்னேற்றம் கண்டுவரும் உலகில் அதன் மாற்றங்களுக்கு முகம்கொடுப்பதற்காக மற்றையவர்களுடன் அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் இளைஞர்களை வலுவூட்டி எதிர்காலத்தில் அவர்களுக்கான தேவைகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த மாற்றங்களை முன்னேற்றகரமான சிந்தனையுடன் முன்னெடுக்க வேண்டியதும் இலக்குகளை சாத்தியமாகிக்கி கொள்வதற்காக அர்பணிப்புடன் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.
இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,
"கடந்த சில வருடங்களில் பல சவால்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணிகள் சங்கம் தனது உறுப்பினர்களை ஒன்று திரட்டி பல்வேறு கருப்பொருள்களின் கீழ் மாநாடுகளை நடத்தியது.
2022 ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள், சட்டத் தொழிலின் இயலுமையை மீள்கட்டமைத்தல் மற்றும் இசைவாக்கமடைதல் அதன் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு நெருக்கடியின் ஊடாக பயணித்தலில் - சட்டத்தின் வகிபங்கு என்ற கருப்பொருளின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.
கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாம் அனைவரும் முன்னரில்லாத சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆனால் இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும், முன்னேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்."
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன,
"சம்பிரதாயமாக, தேசிய சட்டத்தரணிகள் மாநாடு, சட்டத்தொழில் தொடர்பான தினசரி தோன்றும் விடயங்கள் பற்றி கலந்துரையாடவே அர்ப்பணித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாடு 2023/2024 வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய நலன்களுக்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் சட்டத்தரணிகள் சமூகத்தின் வகிபங்கு பற்றி கலந்துரையாட இந்த மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.
இந்த முயற்சியில் பல தரப்பினருடன் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முன்னெப்போதையும் விட நமது நாடு, அரசியல் மற்றும் பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. எனவே, நாட்டில் அத்தியாவசியமான சட்டக் கட்டமைப்பும் சுதந்திரமான நீதித்துறையும் இருப்பது அவசியம்.
சட்டத்தின் ஆட்சியைப் பேணுவதற்கும், நாட்டை எதிர்பார்க்கும் திசையில் நகர்த்துவதற்கும், தொலைநோக்கு மற்றும் ஒழுக்க நெறியுடைய, ஜனநாயகத்தை மதிக்கும் மற்றும் நமது குடிமக்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், தலைமையொன்று அவசியம்.
எங்கள் தொழில் வரலாற்றில் முதன்முறையாக, சட்டத் துறையில் மறுசீரமைப்பு செய்யவேண்டிய அல்லது திருத்தப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துரையாட, தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.
நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதைப் போன்று, இலங்கையை வளர்ச்சியடையும் நாட்டிலிருந்து அபிவிருத்தி அடைந்த நாடாகக் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சட்டங்களை எமது சட்டக் கட்டமைப்பில் அறிமுகப்படுத்துவதற்கும், அதற்காக சட்டங்களை இயற்றுபவர்களுக்கு உந்துதல்களை ஏற்படுத்தத் தேவையான ஆதரவையும் விழிப்புணர்வையும் இந்த மாநாட்டின் மூலம் வழங்குவதே எமது நோக்கமாகும்"
தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் பைசர் முஸ்தபா,
"இன்று ஒரு தேசமாக நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். இது சட்டத்தரணிகள் சமூகத்தை ஒன்றிணைக்கும் மாநாடு மாத்திரல்ல. நாடு மற்றும் பொருளாதாரத்தை மீட்பதற்காக வேண்டி, கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தின் தொடக்கமாக இந்த மாநாட்டை நடத்த நாங்கள் முடிவு செய்தோம்.
ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம். மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர் சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும்.
இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வுகளை காண்பதில் அரசியல் தலைமைகளையும் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். அப்போதுதான் இந்த மாநாட்டின் வெற்றிகரமான முடிவுகளை எம்மால் பெற முடியும்."
இந்நிகழ்வில், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க, முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Add new comment