ஒருநாள் அணியில் முக்கிய பங்காற்ற எதிர்பார்க்கிறார் திமுத் கருணாரத்ன

இரண்டு ஆண்டுகளின் பின்னர் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அணிக்காக முக்கிய பங்காற்ற எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட கருணாரத்ன 2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு அழைக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டமை தொடர்பில் திமுத் கருணாரத்ன வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“ஒரு பக்கம் நீண்டநேரம் களத்தில் நின்று வீரர் ஒருவர் துடுப்பெடுத்தாடுவதுடன், அவரைச்சுற்றி ஏனைய வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்ற திட்டம் இலங்கை அணிக்கு கடந்த காலங்களில் வெற்றிகளை கொடுத்துள்ளது.

அணியின் 40 ஓவர்கள் வரை களத்திலிருந்து துடுப்பெடுத்தாட வேண்டிய வீரர் ஒருவர் எமக்குத் தேவை என்று நான் நம்புகிறேன். தேர்வாளர்களிடம் நான் எதனையும் கேட்கவில்லை. நான் சிறந்தவராக இருந்தால் அவர்கள் தெரிவுசெய்வார்கள். நான் தேர்வாளர்களை துரத்திச்சென்று என்னால் இதனை செய்ய முடியும் என கூறமாட்டேன். நான் அப்படியான நபர் இல்லை. நான் ஓட்டங்களை பெற வேண்டும் என்பதுடன் துடுப்பாட்ட மட்டையால் பேசுவேன்” என்றார். இதேவேளை ஒருநாள்் அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது திமுத் கருணாரத்ன தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

“நான் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் சில போட்டிகளில் மாத்திரமே விளையாடினேன். அதனைத்தொடர்ந்து சில கழக மட்ட போட்டிகள். இவற்றை தவிர்த்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். என்னை அணியிலிருந்து நீக்கும்போது 40 என்ற ஓட்ட சராசரி, சில அரைச்சதங்கள் மற்றும் ஏழு 100 ஓட்ட இணைப்பாட்டங்களையும் பெற உதவியிருந்தேன்.

குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் நான் என எம்முடைய பங்களிப்பை தேர்வாளர்கள் எதிர்பார்த்தப்படி சரியாக செய்திருந்தோம். தேர்வாளர்கள் 40 ஓவர்கள் வரை என்னை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடும்படி கூறினர். அதனையும் செய்தேன். எனினும் புதிய தேர்வாளர்கள் புதிய திட்டத்துடனும், புதிய மாற்றங்களுடனும் இலங்கை கிரிக்கெட் செல்ல வேண்டும் என கூறினர். எனவே அதற்கு என்னுடைய மரியாதையை செலுத்தினேன்” என்றார்.

முன்னணி் அணிகள் இரு முனையிலும் செயற்படுத்து தாக்குதல் ஆட்டத்திற்கு பதில் இலங்கைக்கு முக்கிய பாத்திரமாக செயற்படும் வீரர் ஒருவர் தேவை என்று கருணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். “இங்கிலாந்தைப் போன்று எம்மிடம் அதிக கிரிக்கெட் வீரர்கள் இல்லை. அவர்களிடம் அதிக வீரர்கள் இருந்தாலும் அது எமக்கு பொருந்தாது என்பதோடு அவ்வாறு எம்மிடம் இல்லை.

எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களே உள்ளனர். ஆனால் எம்மிடம் போதுமான உடல் தகுதி இருப்பதோடு இடைவெளிகளுக்கு பந்தை செலுத்தி இரு முனைகளுக்கும் ஓடி ஓட்டங்களை பெறும் வீரர்களே கடந்த காலத்தில் எம்மிடம் இருந்துள்ளனர்” என்றும் கருணாரத்ன தெரிவித்தார்.


Add new comment

Or log in with...