முதல் இரு போட்டிகளில் இருந்தும் ரஷீத் விலகல்

கீழ் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இலங்கைக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் விலகியுள்ளார்.

“அவர் முழுமையான மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ஜூன் 7ஆம் திகதி நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டிக்கு அவர் அணிக்குத் திரும்புவார்” என்று ஆப்கான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் முடிவுற்ற இந்திய பிரீமியர் லீக் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக ஆடிய ரஷீத் கான், அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேற முக்கிய பங்காற்றினார். குஜராத் அணி இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸிடம் தோல்வியை சந்தித்தது.

அவர் ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியின்போதே ரஷீத் கானுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரஷீத் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் சுழல்பந்து முகாமில் முஹமது நபி, முஜீபுர் ரஹ்மான் மற்றும் நூர் அஹமட் ஆகியோருக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் டைடன்ஸ் அணிக்காக ஆடிய நூர் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். எனினும் அவர் இதுவரை ஆப்கான் அணிக்காக ஒரு ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலேயே ஆடியுள்ளார்.

இலங்கை ஒருநாள் தொடருக்குப் பின்னர் முழுமையான போட்டித் தொடர் ஒன்றுக்காக ஆப்கான் அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.


Add new comment

Or log in with...