தமிழகத்தின் வரலாற்றில் எக்காலமும் அழிக்க முடியாத அடையாளம் கலைஞர்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்ததின நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழழை (03) வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இலங்கை_ இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக செயற்படுகிறார்.

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற ஊரில் 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி கருணாநிதி பிறந்தார். அஞ்சுகம் அம்மையாருக்கும் முத்துவேல் அவர்களுக்கும் மூன்றாவது மகனாக இசை வேளாள சமூகத்தில் பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. இவருக்கு முன்னால் இரண்டு சகோதரிகள் இருந்தார்கள்.

கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. இவர் பள்ளிப்படிப்பை திருக்குவளையிலும், பின்னர் திருவாரூரிலும் பயின்றார். இளம் வயதில் பல்வேறு தமிழ்த் தலைவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி.

திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி, தனது 14வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூலகாரணமாக இருந்தவர் கருணாநிதி.

இவரால் தொடங்கப்பட்ட 'மாணவநேசன்' என்னும் இதழ் தற்போது 'முரசொலி' என்னும் நாளிதழாக உருவெடுத்துள்ளது. முரசொலி பத்திரிகை பின்னாளில் தி.மு.க கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையானது. ஒருபுறம் முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டிருந்தாலும், தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சித்தாந்தங்களைப் பரப்பினார்.

இவரது முதல் படமான 'இராஜகுமாரி' 1947 இலும், கடைசிபடம் 'பொன்னர் சங்கர்' 2011 இலும் வெளியானது. திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம், தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவியவர். வயோதிக பிரச்சினைகளால் 07 ஓகஸ்ட் 2018 இல் தனது 94 ஆவது வயதில் காலமானார் கருணாநிதி.

கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பதவி வகித்தார். தமிழகத்தின் முதல்வராக நான்கு தசாப்தங்களில் ஐந்து முறை பதவிவகித்துள்ளார். 1957 இலிருந்து13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர், இதுவரை தோல்வியடைந்ததே இல்லை. 1971 மற்றும் 2006 என இருமுறை கௌரவ ​ெடாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது 'தென்பாண்டி சிங்கம்' புத்தகத்திற்காக தமிழ் பல்கலைக்கழகம் 'ராஜராஜன்' விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

கலைஞர் கருணாநிதி என்றும் தமிழக மக்களின் மனதில் எங்கும் நீங்காத இடம் பிடித்தவர். கருணாநிதி திராவிட அரசியலின் முத்தாக, முதுகெலும்பாக 50 ஆண்டுகள் நிலைத்து நின்றார்.

திருவாரூரில் ஒரு சுயமரியாதைக் கூட்டத்தில் பங்கேற்ற பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சில் ஈடுபாடடைந்து தன்னையும் திராவிட இயக்கத்திற்குள் இணைத்துக் கொண்டார் மு. கருணாநிதி.

அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான் அழகிரி என்று தன்னுடைய மகனுக்கு பெயர் சூட்டினார் கலைஞர். மாணவர் அணி செயலாளரில் தொடங்கி பத்திரிகையாளாராக அழகிரியின் பேச்சினால் அதிகம் கவரப்பட்ட கருணாநிதி பின்னாளில் தன்னுடைய திருவாரூர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவர்கள் அணி ஒன்றையும் கையெழுத்துப் பிரதி பத்திரிகை (மாணவ நேசன்) ஒன்றையும் 1941 இல் நடத்த ஆரம்பித்தார். அது ஒரு மாத இதழ் ஆகும்.

குடிசைப் பகுதிகளில் சென்று அங்கு வாழும் மக்களின் நிலை குறித்து கேட்டறிந்து அதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த கையெழுத்துப் பிரதி துண்டுப்பிரசுரம்தான் பின்னாட்களில் முரசொலியாக உருவெடுத்தது.

ஒரு நாள் பகவான் சாய்பாபா அவர்கள் நாத்திகனான கலைஞர் கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்தார். அவ்வேளை ஆத்திகர்கள் பலர் சாய்பாபாவிடம் 'நாத்திகனான கலைஞர் அவர்களை தாங்கள் சந்திக்கக் காரணமென்ன?' என்று வினவினர். அதற்கு சாய்பாபா, 'கலைஞர் அவர்களை நான் ஒரு இராஜராஜ சோழனாகத்தான் காண்கிறேன். எனவே நான் கலைஞர் சந்தித்தது தவறில்லை'என்று பதிலளித்தார்.

1957 இல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். அந்தக் காலத்தில் இந்தி மொழித் திணிப்பு ஒரு பெரும் சவாலாக இருந்தது. ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி 1957 ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

கல்லக்குடியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இவர் நடத்திய போராட்டம் பின்னர் கட்சியில் இவருக்கு முக்கியமான இடத்தை அளித்தது. 1963 ஆம் ஆண்டு அண்ணாதுரையுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு மாநாட்டினை சென்னையில் நடத்தி அதற்காக இருவரும் சிறை சென்றார்கள்.

1957 இல் சுயேச்சை வேட்பாளராக குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் கருணாநிதி. அச்சமயம் அவருக்கு வயது 33 ஆகும். பின்னர் அதனைத் தொடர்ந்து 12 முறை எம்.எல்.ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய அரசியல்வாதிகள் யாரும் செய்திடாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. 1984 இல் மட்டும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1967 இல் முதன்முறையாக தி.மு.க அரசியல் களம் கண்டது. அப்போது கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் ஐந்து முறை கலைஞர் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தன்னுடைய 45 ஆவது வயதில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது அத்தனை எளிதான காரியமில்லை. ஏற்ற இறக்கங்களையும் சவால்களையும் தாண்டியே இன்று திராவிட முன்னேற்றக் கழகம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த 13 வருடம் என்பது மிகப்பெரும் இடைவெளி. மற்றொரு கட்சியாக இருந்திருந்தால் தி.மு.க என்பது வாழ்ந்த தடம் தெரியாமல் அழிந்து போயிருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

'தூக்குமேடை' நாடகத்தின் போது எம்.ஆர். ராதா இவருக்கும் கலைஞர் என்ற பட்டம் அளித்தார். 1947 இல் ராஜகுமாரி படத்திற்கு முதன்முதலாக வசனகர்த்தாவாக பணியாற்றினார் கலைஞர்.

கலைஞரின் வசனத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னர் சங்கர் (2011) ஆகும்.


Add new comment

Or log in with...