இஸ்லாத்தின் பார்வையில் பாவங்கள்

'நீங்கள் முடியை விட மெல்லியதெனக் கருதும் ஒரு பாவச்செயலை நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எம்மை நாசமாக்கவல்லது (கேடுவிளைவிக்கக் கூடியது) என்றே அறிந்திருந்தோம்' (நூல்: புஹாரி)

இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் அறிவித்துள்ளார். எந்தெந்தத் தவறுகள் சாதாரணமானவை, அற்பமானவை என்று கருதப்பட்டனவோ, அவை மலையையொத்த பாவங்கள் என்றே சஹாபாக்கள் பார்த்தார்கள். அல்லாஹ்வின் மீதான இறையச்சம் அதிகரிக்கும் போது இவ்வாறான மனநிலை மேலோங்கும். அதுவே ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும்.

ஆனால் பாவத்தின் பாரதூரம் குறித்து கவனம் செலுத்தாது சிறு சிறு பாவங்களைத் தொடர்ந்து செய்தால் அவை பெரும் பாவங்களாகி விடலாம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். அதனால் பாவங்களைத் தவிர்த்துக்கொள்வதில் எப்போதும் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியம்.

ஒரு தடவை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள், 'முஃமின் என்பவன் பாவச்செயல்களைச் செய்ய நேருவதை மலையைவிடப் பாரமானதாகக் கருதுவான். மலைக்கு அடிவாரத்தில் இருக்கும் தன் மீது அம்மலை சரிந்து விழப்போவது போன்று உணருவான். ஆனால் ஒரு ஃபாஸிக் - தீயவனின் கண்ணோட்டத்தில் பாவம் என்பது மூக்கின் மீது அமரும் ஈயைப் போன்று கருதுவான்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

'முஃமின்' என்பவன் பாவக்கறை படியாத வகையில் தம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வான். என்றாலும் அவ்வாறான பேணுதல் கொண்டவர்களும் பாவம் மற்றும் தவறுகளுக்கு உள்ளாகவே செய்கின்றனர். ஆனால் அவர்கள் தவறான செயல்கள் குறித்து பிடிவாதமாகவோ, கர்வம் கொண்டவர்களாவோ இருக்க மாட்டார்கள். ஓர் அடியான் மனித பலவீனங்களின் விளைவாக சில சமயங்களில் பாவ காரியங்களில் ஈடுபடுவானாகில் அதனை அவன் பாரிய மலையின் பாரத்தால் அமுக்கப்படுவதாகவே கருதுவான்.

அத்தோடு அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படும் போது பாவச்செயல்களுக்கான தண்டனையை அடைய நேருமே என்ற பயத்தால் நிலை குலைந்து கண்ணீர் விட்டழுவான். அத்தோடு அவன் மனமுருகி, வெட்கமுற்று அடிக்கடி அல்லாஹ்வின் முன் சிரம் சாய்ந்து, அல்லாஹ்வை நெஞ்சாரப் புகழ்ந்து, மிகுந்த பணிவுடன் பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்வான். 'வாரி வழங்கும் கொடையாளனே, என்னை நீ மன்னித்துவிடு! இனி ஒருபோதும் உனக்கு மாறு செய்யமாட்டேன். எனக்கு மன்னிப்பை அருள்வாய் யா அல்லாஹ் என்று கோருவான். ஆனால் பாஸிக்கின் பண்பும் செயற்பாடும் இதற்கு மாற்றமாக இருக்கும். அவன் ஒரு ​போதும் பாவத்தை பாவமாகக் கருதவும் மாட்டான். அதனைப் பாரதூரமானதாக நோக்கவும் மாட்டான்.

அதேநேரம் அறச்செயல் மற்றும் பாவம் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, 'அறச்செயல் என்பது நல்லொழுக்கம், தூய நடத்தை என்பதைக் குறிக்கும். பாவம் என்பது 'எதனைச் செய்வதால் உனது மனதில் உறுத்தலும், நெருடலும் ஏற்படுமோ அது மக்களுக்கு தெரிந்து போவதை நீர் விரும்ப மாட்டீரோ அதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழி எல்லா மக்களுடனும் நல்லமுறையில் நடந்து கொள்வதையே எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொருவருடனும் முகமலர்ச்சியுடன் அணுக வேண்டும். பேச்சில் பெருந்தன்மையையும், நிதானத்தையும் பேண வேண்டும். வாய்மையாகவும் தெளிவாகவும் பேச வேண்டும். கோபம் வரும் போது அடக்கிக்கொள்ள வேண்டும். பெற்றோருடன் நல்ல முறையில் நடந்திட வேண்டும்.

தொகுப்பு: அப்துல் காதிர்...


Add new comment

Or log in with...