இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாக ஹஜ்ஜை ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில் அல்லாஹுதஆலா முஸ்லிம்களின் மீது விதியாக்கினான். ஹஜ் என்பது நாடிச் செல்லல் என பொருள்படும். மக்காவிலுள்ள கஃபாவை நாடிச் செல்வதை இது குறிக்கும். இஸ்லாம் விதியாக்கியுள்ள இபாதத்களை எங்கும் நிறைவேற்றலாம் ஹஜ்ஜை தவிர. அது புனித மக்காவில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றே நிறைவேற்ற வேண்டும். இது ஹஜ்ஜின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாகும்.
ஹஜ்ஜு என்னும் புனித யாத்திரை செல்லும் ஒருவர் தனது இறைநம்பிக்கையை முழுமையாக்குவதுடன் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்மையாகவே அடி பணிந்து இருப்பதை வெளிப்படுத்தியும் காட்டுகிறார். சாதாரணமான புனித தலங்களுக்கு சென்று வருவதைப் போன்றல்லாமல் ஹஜ்ஜானது அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்படும் கிரியையாகும். அது ஆன்மீக வளர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு ஓர் முக்கிய அடையாளமாகவும் அமைகின்றது. ஹஜ்ஜானது தக்வாவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும். வெறும் பேரும் புகழுக்குமாக செய்யப்படும் இபாதத் அல்ல ஹஜ். இதனை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
'ஹஜ்ஜுக்காக தயார் செய்யப்பட வேண்டியவற்றில் மிகச் சிறந்தது. தக்வா என்னும் இறைபக்தியே. ஆகவே நல்லறிவுடையவர்களே என்னையே பயந்து தக்வாவுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்பகரா:197)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள்,
'சரியான முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் அன்று பிறந்த பாலகனை போன்று மீள்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்-: புஹாரி)
மனிதன் இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான விதிகளையும் வழிமுறைகளையும் இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. மனிதன் துறவற வாழ்வுக்குப் பதிலாக ஈருலகிலும் விமோசனம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் இலக்காகும்.
அதேநேரம் உலகப் பற்றை நிர்வகித்து முகாமை செய்வதற்கு தேவையான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கியே இருக்கிறது. மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யும் முறைமை முஹம்மது (ஸல்) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இப்பழக்கமும் முறையும் தொன்று தொட்டு வந்த ஒன்றாகும். மனிதன் இறைகட்டளைக்கு முழுமையாக கீழ்படிந்து எள்ளளவும் குறைபாடின்றி வாழவென ஹஜ் நல்லதொரு பயிற்சியை அளிக்கின்றது.
அதாவது இறைவன் ஒருவனே என்பதற்கு மத்திய இடமாக நிறுவபட்டுள்ள புனித கஃபாவிலே உலகெங்கிலும் இருந்தும் வரும் இறை விசுவாசங்கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்துக் கூடி நிற்கிறார்கள். அங்கு ஹஜ்ஜாஜிகளின் ஆடைகள், வாழ்க்கை முறை, இஹ்ராம் கட்டும் ஒழுங்கு, பிரார்த்தனைகள், இறைவணக்கம் என எல்லாவற்றிலும் ஒற்றுமையைக் காணலாம்.
ஹஜ்ஜின் போது சமத்துவம் முழுமை அடைவது நன்கு நிரூபிக்கப்படுகிறது. சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஹஜ் விளங்குகிறது.
அதேநேரம் ஷவ்வால், துல்கஃதா ஆகிய இரண்டு மாதங்களும் துல்ஹஜ் மாதத்தில் முதல் 09 நாட்களும் மிகப் புனித நாட்களாக யாத்திரிகர்களால் கருதப்படுகின்றது. ஹஜ்ஜுக்காக செல்வோர் எல்லாவித விலக்கப்பட்ட செயல்களையும் இக்காலத்தில் தவிர்த்துக் கொள்வர். இது குறித்து அல் குர்ஆன், 'ஹஜ்ஜு (அதற்கெனக் குறிப்பிட்ட ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்கள்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் (தன்மீது) கடமையாக்கிக் கொண்டால் துல் ஹஜ்ஜு (மாதம் பத்தாம் நாள்) வரையில் உடலுறவு கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பேசுதல், சண்டைச் சச்சரவுகள் செய்தல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். நீங்கள் என்ன காரியத்தைச் செய்தாலும் அவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். இன்னும் ஹஜ்ஜு யாத்திரைக்குத் தேவையான உணவுப் பண்டங்களை முன்கூட்டியே சித்தப்படுத்திக் கொள்ளுங்கள். இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதே ஹஜ்ஜு நமக்கு கற்றுத்தரும் பாடம். ஏனெனில் இது இறைவன் நமக்கு இட்ட கட்டளை. அதற்கும் நாம் அடிபணிய வேண்டும் என்ற ஒரே நோக்குடையவனாக அவன் செயல்படுகிறான். ஹஜ்ஜாஜி கஃபாவை வலம் வருவதில் இருந்தும் 'ஹஜ்ஜருல் அஸ்வத்' என்ற கல்லை முத்தமிடுவதில் இருந்தும் ஸபா, மர்வா எனும் இரு மலைக்குன்றுகளிடையே தொங்கோட்டம் ஓடுவதில் இருந்தும் 'ஜம்ரா' எனும் பகுதியில் கற்களை எறிவதில் இருந்தும் தனக்கிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பற்றி துருவி ஆராய நாடாமலேயே இறைவன் உத்தரவுக்கு அப்படியே பணிபுரிந்து அவன் செயல்படுகிறான்.
புனித ஹஜ் யாத்திரையானது உலகத் தொடர்புகள் அனைத்தையும் அறுத்து விட்டு மறுமைக்காக ஆயத்தமாகும் இறைவனின் திருச்சந்திப்பை பெறுவதற்குமான ஓர் அடையாளமாகும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மாபெரும் நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை சமூகம், பொருளாதாரம், மதம், அரசியல் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருப்பதைக் காணலாம்.
முதலாவதாக ஹஜ்ஜு யாத்திரையை மேற்கொள்ள நாம் ஆயத்தமாகும் போது அப்பிரயாணத்தில் நமக்கு ஏற்படக்கூடிய அவசியமான செலவுகளுக்குள்ள பணத்தைச் சேகரித்து அதனை எடுத்துச் செல்கிறோம்.
ஹஜ்ஜுக்காக செல்லும் போது நாம் வழியில் பல நாடுகளைக் கடந்து செல்கிறோம். பல நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது. இப்புது அனுபவங்கள் நமது அறிவை வளர்க்கிறது. மேலும் பிரயாணம் செய்யும் பழக்கத்தையும் நமக்கு உண்டாக்கித் தருகின்றது.
அரோபியாவை அடைந்தும் இஸ்லாத்தின் பிறப்பிடத்தைப் பார்ப்பதனால் நம் இதயங்கள் பேருவகை கொண்டு ஆனந்தப் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கா நகரை நோக்கிச் செல்லும் போது தேவையற்ற எல்லா எண்ணங்களையும் நாம் நம் மனதை விட்டும் அகற்றி விடுகிறோம். நம் எண்ணம் எல்லாம் நல்லவற்றையே முற்றாக நாடி அவற்றை கொண்டே நிரப்பி விடுகிறோம் நாம் 'இஹ்ராம்' என்னும் யாத்ரீகனின் ஹாஜியின் உடையை அணிந்ததும் நம் உள்ளத்தில் இயற்கையாகவே ஓர் எளிய வாழ்க்கையின் உணர்வும், எளிய தன்மையும் ஏற்பட்டு விடுகிறது.
மேலும் எல்லா முஸ்லிம்களும் ஒரே விதமான எளிய உடையை அணிந்திருப்பதைப் பார்க்கும் போது முஸ்லிம்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் சகோதரர்களே என்ற நல்லுணர்வை நாம் பெறுகிறோம். அதே போன்று எல்லா முஸ்லிம்களும் ஒருவர் பின் ஒருவராய் கஃபாவைச் சுற்றி வலம் வரும் போது உலகிலிருந்து அங்கு வந்திருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரேவிதமான உடையை அணிந்து கொண்டு ஒரே விதமான செயல்களையே செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாய்ப் பார்க்கின்றோம். அப்போது இஸ்லாத்தின் முன் எல்லா முஸ்லிம்களும் சமமே என்பதனையும் நாம் தெளிவாக உணர்கிறோம்.
ஹஜ்ஜின் ஊடாக ஒருவரை ஒருவர் நல் முறையில் அறிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தத்தம் அனுபவங்களை சொல்லி தம் உலக அறிவை விசாலப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. இதன் ஊடாக முஸ்லிம் சகோதரத்துவத்தில் வளர்ச்சியும் நல்லெண்ணமும் ஏற்படுகின்றன.
எனவே ஹஜ் எண்ணற்ற நற்பயன்களையும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உலக பெரு வாழ்விற்கும் அது உறுதுணையாக இருப்பதையும் எம்மால் கண்டு கொள்ள முடியும்.
மௌலவி எம்.யூ.எம்.வாலிஹ்...
(அல் அஸ்ஹரி), வெலிகம
Add new comment