உளவு செய்மதியை நிறுவும் வடகொரிய முயற்சி தோல்வி

வட கொரியா முதல் முறை அனுப்பிய இராணுவ உளவு செய்மதி கடலில் விழுந்து தோல்வி அடைந்துள்ளது.

12 நாள் இடைவெளியில் பூமியின் சுற்றுவட்டத்தில் நிறுவுவதற்காக வட கொரியா நேற்று அந்த செய்மதியை விண்ணில் ஏவியது. எனினும் அந்த புதிய செய்மதியை எடுத்துச் சென்ற ‘சியோலியா–1’ ரொக்கெட் கொரியாவின் மேற்குக் கடலில் விழுந்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இராணுவ செயற்பாடுகளை கண்காணிப்பதற்காகவே இந்த செய்மதி நிறுவப்படவிருந்ததாக வட கொரியா தெரிவித்தது. எனினும் செய்மதியை நிறுவும் இரண்டாவது முயற்சி முடியுமான விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

நேற்று இந்த ரொக்கெட் ஏவப்பட்டபோது தென் கொரிய தலைநகர் சோலில் தவறுதலான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஜப்பானும் தனது தெற்கிலுள்ள ஒகினாவா குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தனது ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகிய ஏவுகணை நடுவானில் சிதைந்து போயிருக்கலாம் என்று தென் கொரியா கூறியது. நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் அது தெரிவித்தது.

வட கொரியா புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சியதுபோல் தெரிகிறது என்றும் அதன் விபரங்கள் ஆராயப்படுகின்றன என்றும் ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா கூறினார்.

தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா இந்த ரொக்கெட் ஏவப்பட்டதை கண்டித்திருப்பதோடு இது ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் பலதையும் “அப்பட்டமாக மீறுகிறது” என்று தெரிவித்துள்ளது.

“ஜனநாயக வாயில் மூடப்படாதபோதும், வட கொரியா ஆத்திரமூட்டும் செயல்களை உடன் நிறுத்தி அதற்கு பதில் உடன்பாட்டுக்கான தேர்வை மேற்கொள்ள வேண்டும்” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை பேச்சாளர் அடம் ஹொட்ஜ் தெரிவித்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதிப்பதற்கு வட கொரியாவுக்கு பாதுகாப்புச் சபை தடை விதித்துள்ளது. நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிக்கு அனுப்பும் ரொக்கெட்டுகளுக்கு ஒரே தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...